எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும்.
திருமணம் தடை பட்டாலோ அல்லது நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருந்தாலோ, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை நாடினால் பலன் உண்டாகும். நம் பிரார்த்தனை நிறைவேற சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 வாரம் ஏதாவது ஒரு கிழமையில் (ஆறு வாரமும், முதல் வாரம் வந்த கிழமையிலேயே தொடர்ந்து அடுத்த 5 வாரமும்) வரவேண்டும். வரும் நேரமும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். காலை என்றால் ஒவ்வொரு வாரமும் காலையிலே வர வேண்டும். மாலை என்றால் ஒவ்வொரு வாரமும் மாலையிலே வரவேண்டும்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் ஆறுவாரமும், வாரம் ஒரு நாள் என்று ஆறு தடவைகள் தொடர்ந்து வந்து சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட திருமணம் விரைவில் அமையப்பெறும். திருமணம் ஆக வேண்டி ஆண்டவனிடம் பிரார்த்திக்க வருபவர்கள் வள்ளி மணவாள பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவேண்டும்.
ஆறாவது வாரம் ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்களுடன் வந்து மரகத விநாயகர், மூலவர், வள்ளி மணவாளப் பெருமான், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, ஆதி மூலவர் ஆகிய தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். வள்ளி மணவாளப் பெருமான் சன்னதியில் தரும் மாலையை திருமண மாலையாக எண்ணி அணிந்து ஆறுமுறை ஆலயத்தை சுற்றி வரவேண்டும்.
பின்னர் மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று திருமணம் நடைபெறும்வரை பாதுகாத்து வணங்கி வரவேண்டும். திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராய் இத்தலம் வந்து ஆறு தெய்வ சன்னதிகளுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பழைய மாலையை கோவிலில் உள்ள தல மரத்தில் கட்ட வேண்டும். இவ்வாறு இந்த ஆலயத்தில் தொடங்கப்பட்ட மணவாழ்வு உலகப்பயன்கள் அனைத்தும் பெற்று மகிழ்வுடன் தொடர இவ்வாலயம் வந்து அடிக்கடி முருகனின் அருள்வேண்டி வணங்கி செல்ல எல்லாம் சுபமாய் நடக்கும்.
திருமணம் தவிர மற்ற வேண்டுதல்களான, வீடு கட்டுவது அல்லது வாங்குவது, பிள்ளைப்பேறு, செல்வம், நோய் நிவர்த்தி ஆகியவை பெற வருபவர்கள் மேற்படி முறைப்படி ஆறு வாரம் மூலவர் சன்னிதியில் அர்ச்சனை செய்து வரவேண்டும். ஆறாவது வாரம் மூலவர் சன்னிதியில் இருந்து பெற்ற மாலையை அணிந்து ஆறு முறை நம் வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டு வெற்றி வேண்டி ஆலயத்தை வலம் வர வேண்டும்.
இத்தலத்திற்கு பிரார்த்தனை செய்து வருபவர்கள் ஆறு வாரமும் திருப்புகழ் பாடி இறைவனை வணங்க வேண்டும். எண்ணியது முடிக்கும் எம்பெருமானை எண்ணி நம்மனதில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முதல் ஐந்து வாரங்களுக்கு, ஒவ்வொரு முறை வரும் போது இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூமாலை ஒன்று மற்றும் இரண்டு எலுமிச்சம் பழம் கொண்டு வணங்க வேண்டும். ஆறாவது வாரம் ஆண்டவனை வழிபட்டு, அர்ச்சனை அல்லது அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் வந்து போகும் பொழுது நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிலே வைத்து பூவைத்து பூஜித்து வரவேண்டும்.
முதல் வார எலுமிச்சம் பழத்தை இரண்டாவது வாரம் எலுமிச்சம் பழம் வந்தவுடன் எடுத்து கடல், கிணறு ஏதாவது ஒர் அசுத்தம் இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு தற்சமயம் பெற்று வந்த பழத்தை பூஜிக்க வேண்டும். இவ்வாறு ஐந்து வாரம் செய்துவிட்டு ஆறாவது வாரம் நாம் பெற்று வந்தபழத்தை ஈரம்படாது பாதுகாத்து நம்முடைய பிரார்த்தனை நிறைவேறும் வரை பூஜிக்க வேண்டும். இந்த பிரார்த்தனை பூஜை காலங்களில் நாம் அண்டர்பதி திருப்புகழை ஓதி வணங்க வேண்டும்.
நம் பிரார்த்தனை நிறைவேறியதும் சிறுவாபுரி வந்து ஆறு அர்ச்சனைக்கு உரிய பொருட்கள் வைத்து பாலசுப்பிரமணிய சுவாமியை வணங்க வேண்டும். இங்கு உள்ள இரண்டு முருகப்பெருமான் சன்னதிகளில், ஆதி மூலவரிடம் நம்முடைய குறைகளையும், தடைகளையும் நீக்கக்கோரி வணங்கி வர இன்ப வாழ்வு உண்டாகும்.
இத்தலத்தில் பிரார்த்தனை செய்து வருவோர்கள் முதல் வாரத்திலேயோ அல்லது தொடர்ந்து வரும் வாரங்களிலோ பலன் பெறுவது உண்டு. ஒருவருடைய நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனை, அவரின் காரியத்தை மிக விரைவில் முடித்து வைக்கிறது.
சிறுவாபுரி முருகனை நினைத்தாலே போதும் நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இதுகுறித்து கோவிலுக்கு வந்த பக்தர் சரவணன் என்பவர் கூறியதாவது:-
எனக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஆகும். தற்போது சென்னை பூந்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். தொடர்ந்து 6-வது வாரமாக கோவிலுக்கு வந்துள்ளேன். இன்று மொட்டையும் போட்டு உள்ளேன். இந்த முருகன் சக்தி வாய்ந்தவராக இங்கு விளங்குகிறார். குழந்தை பாக்கியம், சொந்த வீடு கட்டுதல் போன்ற அனைத்து பிரார்த்தனைகளையும் இவர் நிறைவேற்றி தருகிறார்.
சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள பகுதியில் செங்கற்களை அடுக்கி வைத்து பூசாரி மூலம் பூஜைகள் செய்தால் அது உடனடியாக நிறைவேறும் என பக்தர்கள் வெகுவாக நம்புகிறார்கள்.
நான் முதுகுளத்தூரில் இருந்த போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்று வருவேன். இப்போது சென்னை வந்ததும் இந்த கோவிலின் சிறப்புகளை அறிந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன். இதனால் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.