- நாளை (செவ்வாய்க்கிழமை) மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.
- இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 48 நாட்களாக மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.
இதையொட்டி மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று காலை ஆனைமுகன் வழிபாடு வேள்வியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனிடம் அனுமதி பெறப்பட்டது. காலை 9 மணிக்கு நவகோள் வழிபாடும், காலை 10.30 மணிக்கு குடம் நிறுவுதலும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு ஆனைமுகன் வழிபாடு, தீப வழிபாடு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு குடம் வழிபாடு, தேவியர் போற்றி வழிபாடு தொடங்கியது.
மேலும் 48-ம் ஆண்டு சதசண்டி பெருவேள்வி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் முதற்கால சண்டி வேள்வி, மாலையில் 2-ம் காலம்,இன்று (திங்கட்கிழமை) காலையில் 3-ம்காலம், மாலையில் 4-ம் காலம், நாளை காலை 7.30 மணிக்கு 5-ம் கால சண்டி வேள்வி மற்றும் மண்டலாபிஷேக நிறைவு வழிபாடு, கன்னியர் வழிபாடு, சுமங்கலி வழிபாடு, காளையர் வழிபாடு நடைபெறுகிறது.
பிற்பகல் 11 மணிக்கு சதசண்டி பெருவேள்வி நிறைவு தீப வழிபாடும், பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் லட்சுமணன், உதவி ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.