தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.
இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.
மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் அம்மன், புற்று ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அம்மனுக்கு நாள் தோறும் பூஜையும் வழிபாடுகளும் நடந்து வருவதால் இந்த புற்றும் நாள்தோறும் வளர்ந்து வந்தது. இதனால் அம்மனின் புற்று சிறிய மலைபோல பிரமிக்க வைக்கும் வகையில் பக்தி பரவசத்துடன் காட்சி அளிக்கிறது. இது தேவியின் தெய்வீக ரூபத்தை மேலும் அதிகரித்து காட்சி தருவதாக பக்தர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.
அம்மனை தரிசிக்க வருவோருக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் வேண்டிய வரத்தை அருளுவார். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தாய் போல கருனை மழை பொழிவார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனால் தரணி எங்கும் பகவதி அம்மனின் புகழ் பரவி உள்ளது.
அம்மனை தரிசிக்க பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், ஏன் வெளி நாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனின் ஆசியை பெற்றுச் செல்கிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. புற்று வடிவில் அம்மன் உள்ளதால் அதன் முன்பு வெள்ளியால் செய்யப்பட்ட பிரபையில் அம்மனின் உருவமும் அதன் முன்பு பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட பகவதி அம்மனின் உருவ சிலையும் இடம் பெற்று உள்ளது.
இந்த பஞ்சலோக அம்மன் சிலை உற்சவர் சிலை ஆகும். இதனால் வெள்ளி பல்லக்கில் இந்த அம்மன் சிலையை வைத்து பவனியாக கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் திருவிழா காலத்தில் 3-ம் திருவிழாவில் இருந்து தினசரியும் இரவு 9.30 மணிக்கு அம்மன் பவனி நடக்கிறது.
இக்கோவிலுக்கு கடல் நீரே புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. சில பக்தர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு காசுகளை கடலில் வீசி வழிபடுகிறார்கள். சில பக்தர்கள் நேர்ச்சை பொருட்களையும் கடலில் போட்டு வேண்டுதல் நடத்துகிறார்கள். இதனால் கடற்கரையில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.