விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் ஜீவாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜாகான், லவ் டுடே, திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.