- 30 வயதைக் கடந்தும் ஆண்கள், பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது.
- திருமண தடை நீங்க இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.
பூமியில் பிறந்த அனைவரும் தங்களின் கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அடைவது உறுதி. அதில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான, திருமணத் தடையும் இருக்கலாம். 30 வயதைக் கடந்தும், ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு திருமணம் நடைபெறாமல் உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் விலகி நிம்மதியாக வாழ்வதற்கு சித்தர்கள் மூலமாக சிவபெருமான் பல வழிகளைக் காட்டியுள்ளார். அவற்றில் ஒன்றுதான், இந்த பெருகமணி அகத்தீஸ்வரர் கோவில் வழிபாடு.
ஆம்.. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், திருமணத் தடை விலகி விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
30 வயதைக் கடந்தும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த ஆலயத்திற்கு ஒரு முறை வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அகத்தியர் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் அன்று, இங்கே வருகை தருவது மேலும் சிறப்பான அருளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். அப்படி வரும் போது, இங்குள்ள மூலவருக்கும், அம்பாளுக்கும் ஒரு மரிக்கொழுந்து மாலை மற்றும் ஒரு மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஒரு முகூர்த்த நேரம் (90 நிமிடங்கள்) பிரார்த்தனை செய்ய வேண்டும்.
மேலும் தலவிருட்சமான வில்வ மரத்தை, அகத்தியருக்கு பிடித்த 8 எண் இலக்கத்தை குறிக்கும் வகையில் எட்டின் மடங்குகளில் வலம் வர வேண்டும். அப்போது ‘அகத்தீசாய நமக’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இதற்கான பலனை திருமணமாகாதவர்கள், விரைவில் அடைவார்கள்.
திருச்சியில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பெருகமணி என்ற ஊர். இங்கு ஆனந்தவல்லி உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.