ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா போர்ப் பயிற்சி மேற்கொள்வது அந்நாட்டின் தனிப்பட்ட முடிவு.
அதே நேரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா மிக நெருக்கமான பாதுகாப்புத் துறை நட்புறவைப் பேணி வருகிறது என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளா்களைச் சந்தித்த பெண்டகன் செய்தித் தொடா்பாளா் பிரிகேடியா் ஜெனரல் பாட்ரிக் ரைடரிடம் இந்தியாவுடனான இராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உறுதியாக இருக்கும் அமெரிக்கா
“இந்தியா இறையாண்மை பெற்ற நாடு. எந்த நாட்டுடன் இணைந்து போர்ப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அந்நாடு சுயமாக எடுக்கும் முடிவு. அதே நேரத்தில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா மிகநெருக்கமான பாதுகாப்புத் துறை நட்புறவைப் பேணி வருகிறது.
அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு எவ்வித தொய்வும் இல்லாமல் சீராக உள்ளது. இந்த நட்புறவைத் தொடர்வதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார்.
சீனாவுடன் அமெரிக்கா முரண்பாடு
கடந்த 1 முதல் 7 ஆம் திகதி வரை ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் அந்நாட்டுடன் இணைந்து இந்திய, சீன இராணுவங்கள் போர்ப் பயிற்சி மேற்கொண்டன. ஏற்கெனவே உக்ரைன் மீது போர் தொடுத்த விடயத்தில் ரஷ்யாவுடனும் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளால் சீனாவுடனும் அமெரிக்காவுக்கு இணக்கமான உறவு இல்லை.
உக்ரைன் விவகாரத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
அதே நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.