- 108 வைணவ திவ்யதேச கோவில் ஒன்றாக இக்கோவில் இருக்கிறது.
- தாயார் வைகுந்தவல்லி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இந்த வைகுண்ட நாதர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான பெருமாள் வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன் என்கிற பெயரிலும், தாயார் வைகுந்தவல்லி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் இருக்கும் ஊரின் புராணப் பெயர் வைகுந்த விண்ணகரம் ஆகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேச கோவில் ஒன்றாக இக்கோயில் இருக்கிறது.
தல புராணங்களின்படி ஸ்ரீராமபிரான் பிறந்த இஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னன் ஸ்வர்ணபானு ஏதோ பிற உயிர்கள் மீது அன்பு கொண்டவனாகவும், நீதிநெறி தவறாமலும் ஆட்சி செய்து வந்தான். தெய்வபக்தி நிறைந்தவனாகவும் இருந்தான். இவனுக்கும், இவனது மனைவிக்கும் நீண்ட நாட்களாக பெருமாளை அவர் வாசம் செய்யும் வைகுண்டத்திலே சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
அரசனுக்குரிய கடமைகளை முடித்த பின்பு ஸ்வர்ணபானு மற்றும் அவனது மனைவியும் காட்டிற்கு சென்று தவ வாழ்க்கையை மேற்கொண்டனர். அப்போது சுற்றிலும் நெருப்பை மூட்டி, அந்த நெருப்புக்கு நடுவே நின்று பெருமாளை குறித்து தவம் செய்து, தங்களின் பூதவுடலை நீத்து வைகுண்டம் சென்றார்கள். அங்கு சென்று பார்த்தபோது வைகுண்டத்தில் பெருமாள் இல்லாததை கண்டு வருந்தினர். அப்போது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து வணங்கிய ஸ்வர்ணபானுவும், அவரது மனைவியும் தாங்கள் பெருமாளின் தரிசனம் கிடைக்கப்பெறாததை குறித்து முறையிட்டனர்.
இதற்கு பதிலளித்த நாரதர் பூமியில் நீங்கள் எத்தகைய தவம் செய்து இருந்தாலும் தான தர்மங்கள் அதிகம் செய்யாததால் வைகுண்டத்தில் பெருமாளின் தரிசனம் உங்களுக்கு கிடைக்காமல் போயிற்று என கூறினார். இதற்கு பரிகாரமாக காவிரி நதியின் வடகரையில் இருக்கும் ஐராவதீஸ்வரரை வணங்கினால் பெருமாளின் தரிசனம் கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். அதன்படியே ஸ்வர்ணபானு மற்றும் அவன் மனைவி தமயந்தியும் பூலோகத்தில் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு சென்று அவரை வணங்கினர். அப்போது ஐராவதீஸ்வரர் தானும் பெருமாளின் தரிசனத்திற்காக காத்து கிடப்பதாகவும், நாம் மூவரும் சேர்ந்து பெருமாளின் தரிசனத்திற்காக தவம் இருப்போம் என்று கூறினார். அதன்படியே மூவரும் பெருமாளை குறித்து தவம் இருந்த போது இவர்களுடன் நான்காவதாக உதங்க முனிவர் என்பவரும் திருமாலின் தரிசனத்திற்காக இவர்களோடு சேர்ந்து தவமிருந்தார்.
நீண்டநாள் தவத்திற்குப் பிறகு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி,பூதேவியுடன் அந்த நால்வருக்கும் காட்சி தந்தருளினார். அப்போது ஐராவதீஸ்வரர் பெருமாளிடம் பெருமாள் காட்சி தந்த இந்த இடம் வைகுண்ட விண்ணகரம் என அழைக்கப்பட வேண்டும் என்றும், இங்கே கோவில்குளம் பெருமாள் வைகுண்ட நாதன் என அழைக்கப்பட வேண்டும் என்கிற வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பத்தை போலவே பெருமாள் இங்கே வைகுண்டநாதர் என்றும் தாயார் வைகுந்தவல்லி என்கிற பெயரிலும் அழைக்கப் படுகின்றனர்.
கோயில் சிறப்புக்கள்
இத்தல பெருமாள் கிழக்கு திசை நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கோயிலின் மூலவர் சன்னதியின் மேல் இருக்கும் விமானம் அனந்த சத்ய வர்த்தக விமானம் என அழைக்கப்படுகிறது. உதங்க முனிவர், உபரிசரவசு ஆகியோர் இத்தல பெருமாளை வழிபட்டுள்ளனர். பொதுவாக ஒருவர் இறந்த பிறகு தான் வைகுண்டம் சென்று பெருமாளை வழிபட முடியும். ஆனால் பூமியில் வாழும் போதே பெருமாள் வைகுண்டத்தில் பார்த்தவாறு தரிசிக்க நினைப்பவர்கள் இத்தலத்தில் வந்து பெருமாளை வழிபடலாம். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கவும், குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை ஓங்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம், துளசிமாலை சாற்றி வழிபடுகின்றனர்.
கோயில் நடை திறப்பு
காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
கோயில் அமைவிடம்
அருள்மிகு வைகுண்டநாதர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருநாங்கூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது.