அரச சேவையில் உள்ள அதிகப்படியான அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன அறிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், கட்டாய ஓய்வு வயதெல்லை 60 வயது எனவும் அறிவிக்கப்பட்டது.
அதிகப்படியான ஊழியர்கள்
இந்த நிலையில் அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும்.
எனவே அரச நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ, சேவையை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது.
பொருந்தாத வேலைகள்
உதாரணமாக அரசாங்கம் 2020இல் 60,000 பட்டதாரிகளை பொதுச் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்தது. எனினும் அவர்களில் பலர் பட்டதாரிகளுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டதாரிகளை கொண்டு அரச துறையில் உள்ள வெற்றிடங்களை அரசாங்கம் நிரப்ப முடியும். அத்துடன் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை நிதி மேலாண்மை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.