இப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருக்கிறார். மேலும், கே.கே.மேனன், அதுல் குல்கர்னி, ரகுல் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தை சங்கல்ப் இயக்கியுள்ளார். மறைந்த பாலிவுட் நடிகர் ஓம் பூரி நடித்த கடைசி படமும் இதுதான். மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ராணா கப்பற்படை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வேடத்திற்காக ராணா, ரொம்பவும் கஷ்டப்பட்டதாக ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் தொடங்கிய சமயத்தில் ராணா, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். அந்த பாகத்தில் இவர் கரடு முரடாக தெரியவேண்டும் என்பதற்காக, தனது உடல் எடையை அதிகரித்து, ரொம்பவும் கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு கொண்டு வந்தார். அந்த உடற்கட்டுடன் இவர் எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரொம்பவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், காஸி படத்தில் ராணா டகுபதியின் தோற்றம் அதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, ராணா இப்படத்தில் தனது தோற்றத்தை குறைப்பதற்காக சுமார் 2 மாதங்கள் சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல், முழு நேரமும் ஜிம்மே கதியென்று கிடந்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும், இப்படம் முழுக்க முழுக்க கடலுக்குள்ளேயே படமாக்க வேண்டியிருந்ததால், ஆழ்கடல் நீச்சலை பிரத்யேகமாக கற்று இப்படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறுகின்றனர்.
ராணாவின் இந்த முயற்சி அவருக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்று பல்வேறு தரப்பிலும் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், அது ரசிகர்களை எந்தளவுக்கு சென்றடையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.