முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெல், சமீபத்தில் மாணவர்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மூன்று வகையான லேப்டாப் கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்களின் பணிக்கு உதவியாக இருக்கும் வகையில் பிரத்யேகமாக இந்த கணினிகளில் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவை விண்டோஸ், குரோம் ஓ.எஸ். ஆகிய இயங்கு தளங்களில் செயல்படும் திறன் கொண்டது. பள்ளி செயல்திட்டங்கள், பயிற்சி முறைகள் உள்ளிட்ட கடினமான பணிகளுக்கு இந்த கணினிகள் பலவிதங்களில் உதவியாக இருக்கும். வீட்டுப்பாட அட்டவணை, பாட நேரம் திட்டமிடல், நினைவூட்டும் அறிவிப்புகள் என இன்னும் பல்வேறு வசதிகளும் இதில் உள்ளன.
முக்கியமாக இந்த மடிக்கணினியை இரண்டாக பின்பக்கமாகவும் மடித்து பயன்படுத்தலாம். திரையை மட்டும் திருப்பி மாணவரின் பணியை பெற்றோர் அல்லது ஆசிரியருக்கு காண்பித்து சரிபார்க்க முடியும்.
திரையை மட்டும் தனி “டேப்” போல பயன்படுத்தவும் முடியும். உறுதியான கண்ணாடியால் ஆன திரை குழந்தைகளின் அசாதாரண சேட்டைகளிலும் பாதிக்கப்படாமல் நீடித்து உழைக்கும். ஸ்கைப் வழி வகுப்புகள், வீடியோ சேமிப்பு வசதிக்கான கேமரா போன்றவை இணைக்கப்பட்டுள்ளது. விரைந்து செயல்படுவதற்கான நவீன பிராஸசர் மற்றும் பேட்டரி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன. டெல் லேடிடியூடு 11 மற்றும் குரோம்புக் 11 மடிக்கணினிகளில் இந்த வசதிகள் உள்ளன. கணினியின் சிறப்பம்சங்களுக்கு ஏற்ப விலைகள் மாறுபடுகின்றன.