நான் ஜெயலலிதா எனும் சிங்கத்திடம் இருந்த குட்டி சிங்கம்; என் உயிருள்ளவரை அ.தி.மு.க வையும் ஆட்சியையும் காப்பாற்றுவேன் என சிறைவைக்கப்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களிடம் சசிகலா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அங்கு சசிகலா பேசியதாவது: ”அ.தி.மு.கவில் ஒரு குட்டி சிங்கம் வந்துவிட்டதே என எரிச்சலடைந்துள்ளனர். எத்தனை வலை விரித்தாலும் அதை எதிர்கொண்டு இந்த சிங்கம் வெளியே வரும் அ.தி.மு.க ஆட்சியை எப்படியாவது கலைத்துவிடலாம் என நினைக்கின்றனர். இதற்காக எட்டப்பர்களை வைத்து ஆட்சியை கலைக்கவும் முயற்சிக்கின்றனர்.
இங்கே 129 உறுப்பினர்கள் இருக்கின்றீர்கள் நீங்கள்தான் அரசாங்கம். நீங்கள் 129 பேரும் சிங்கங்கள். நானும் ஒரு சிங்கம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
நான் ஜெயலலிதா நினைவிடத்தில் நின்றபோது என்னை நகரவிடாமல் ஒரு ஈர்ப்பு சக்தி தடுத்தது. அப்போது அங்கே அ.தி.மு.கவையும் ஆட்சியையும் உயிருள்ளவரை காப்பாற்றுவேன் என உறுதி எடுத்துக் கொண்டேன்.
என் உயிருள்ளவரை அதிமுகவையும் ஆட்சியையும் காப்பாற்றுவேன் எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் அசைத்துவிட முடியாது; நம் கையாலே நம் கண்ணை குத்துகிறார் பன்னீர்செல்வம்.
நாம் ஒற்றுமையாக இருந்தால் டெல்லி வரை யாரும் எதுவும் செய்ய முடியாது என்னைப் பொறுத்தவரையில் நான் எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டேன்.
அ.தி.மு.க வையும் ஆட்சியையும் தக்க வைக்க எந்த முடிவையும் தெளிவாக எடுப்போம்; நானும் ஜெயலலிதாவும் சென்னை, பெங்களூர் சிறைகளைப் பார்த்தவர்கள்; சிறையில் இருந்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறோம்.
பெண் என்றுதானே அச்சுறுத்தப் பார்க்கிறார்கள் அது நடக்காது சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்கவிடாமல் சதி செய்கிறார்கள். நாம் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும்; ஜெயலலிதா படத்தை திறப்பதுதான் என் வாழ்நாள் பாக்கியம்.
நாம் நிச்சயம் ஆட்சி அமைப்போம். 129 பேரும் ஜெயலலிதா நினைவிடத்தில் நின்று புகைப்படமெடுத்து அங்கிருந்து கோட்டைக்கு செல்வோம் என ஜெயலலிதா படம் முன்பாக சபதமெடுப்போம்”. இவ்வாறு சசிகலா கூறினார்