81 பில்லியன் அமெரிக்க டொலர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கு, கடன் நிவாரணம் கோரி, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பட்ட தனது வேலைத்திட்டத்தை நாளை முதல் இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கின்றது.
இதன்படி, முறையாக அதன் உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களிடம் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கத்தை சமர்ப்பிக்கவுள்ளது.
கடந்த ஏப்ரல் 12 அன்று அதன் அனைத்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதையும் நிறுத்திய இலங்கை, செப்டம்பர் 1ஆம் திகதி,நாணய நிதியத்துடன் நான்கு ஆண்டுக்கு, 2.9 பில்லியன் டொலர் என்ற விரிவாக்கப்பட்ட நிதி வசதி, பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகள், கடனாளிகளிடமிருந்து ‘கடன் உத்தரவாதங்கள்’ என்று அழைக்கப்படுவதை இலங்கை பெறுவதைப் பொறுத்தது.
இதன்படி, இலங்கை சுமார் 29 பில்லியன் அமெரிக்க டொலர்களை மறுசீரமைக்க விரும்புகிறது, இதில் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் (ISBs) 19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்தநிலையில், கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலங்கை கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை முறைப்படி நாளை (23) ஆரம்பிக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.