இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவரை மிகவும் கவர்ந்தவர் யோகா குரு சூர்ய நாராயண் சிங். கங்கனா ரனாவத் நடிக்க வரும் முன்பு அவரது 18-வது வயதில் மும்பையில் உள்ள ஜுஹூ கடற்கரைக்கு சென்றார். அப்போது, அங்கு யோகா செய்து கொண்டிருந்த சூர்ய நாராயண்சிங்கை பார்த்து வியப்பு அடைந்தார்.
பின்னர் அவரை சந்தித்து தனக்கு யோகா கற்றுத்தரும்படி கங்கனா கேட்க, அதில் இருந்து அவருக்கு சூர்ய நாராயண் சிங் யோகா குரு ஆனார். இன்று வரை அவருடைய ஆலோசனைப்படி தான் கங்கனா ரனாவத் யோகா செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்து இருக்கிறார். இந்தி பட உலகின் பிரபலமாகவும் இருக்கிறார். இந்த நிலையில், அவருடைய யோகா குரு மும்பையில் யோகா மையம் ஒன்றை தொடங்க திட்டமிட்டார். இதை அறிந்த கங்கனா ரனாவத் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள தனது இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டை சூர்ய நாராயண்சிங்குக்கு அன்பளிப்பாக கொடுத்து அவரை யோகா மையம் தொடங்கும்படி கூறி இருக்கிறார். இந்த வீட்டின் மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
‘யோகா குருவுக்கு குருதட்சணையாக இந்த வீட்டை கொடுத்து இருக்கிறேன்’ என்று கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார். இதுமட்டுமல்ல, அந்த வீட்டை யோகா மையமாக மாற்றி அமைக்க தேவையானவற்றையும் செய்து வருகிறார். இத்துடன் விடவில்லை. தனக்கு தெரிந்தவர்களிடம் சூர்ய நாராயண்சிங்கிடம் யோகா கற்கும்படியும் கங்கனா ரனாவத் கூறி வருகிறார். இவரது குரு பக்தியை அறிந்த இந்தி பட உலகம் பிரமித்து நிற்கிறது.