- தீபக் ஹூடா, முகமது சமி இந்த தொடரில் இருந்து விலகல்.
- ஷ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது அணிக்கு திரும்பியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் டி20 போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தீபக் ஹூடாவும், கொரோனாவில் இருந்து குணமடையாததால் முகமது சமியும் இத்தொடரில் இருந்து விலகி உள்ளனர். அவர்களுக்கு பதில் ஷ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் வலுவான நிலையில் உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென் ஆப்பிரிக்கா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.