இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகனாக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள `புரூஸ் லீ’ படம் பொங்கலில் திரைக்கு வரவிருந்தது. அதேநேரத்தில் விஜய் நடித்த `பைரவா’ படமும் திரைக்கு வந்ததால் பொங்கல் ரேஸில் இருந்த `புரூஸ் லீ’, `புரியாத புதிர்’ உள்ளிட்ட படங்கள் பின்வாங்கியது.
அதனைத்தொடர்ந்து, `புரூஸ் லீ’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி-க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்துள்ளார். மேலும் பால சரவணன், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மார்ச் 3-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அதேநாளில், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்-மகிமா நம்பியார் நடித்துள்ள `குற்றம் 23′ படமும், தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள `டோரா’ படமும், வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள `அட்டு’ என்ற படமும் மார்ச் 3-ஆம் தேதியே ரிலீசாக உள்ளது.
மேலும் விஜய், அஜித் படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் நடிப்பில் உருவாகியுள்ள `கமாண்டோ 2′ தமிழிலில் டப் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.