நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் தற்போது எந்தளவில் செயற்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கே எதுவும் தெரியாது. அரசாங்கத்திடம் ‘தேசிய நல்லிணக்கத்திற்காக என்ன செய்கின்றீர்கள்?’ என்று கேட்டால்,’அதுவா… அது…வந்து…..போயி’ என்று இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளுக்கும் தேசிய நல்லிணக்கம் என்ற வேலைத்திட்டத்திற்கும் சம்மந்தன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதைப் பற்றி அவர் எந்த இடத்திலும் கதைப்பதும் இல்லை. அவருக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பதே பிரதானமான குறிக்கோளாக இருக்கின்றது.
புதிய அரசியலமைப்பை வைத்து இன்னும் சில காலத்திற்கு அரசியல் நடத்தலாம் என்று அவர் நினைக்கின்றார். நாடாளுமன்றத்தில் வழி நடத்தல் குழுவில் இருக்கும் ஏனைய கட்சிகள் ஏதேனும் ஒரு விவாதத்தை ஆரம்பித்தால்,’ நான் வழி நடத்தல் குழுக் கூட்டத்தை இழுத்து மூடிவிட்டுப் போய் விடுவேன்| என்று கூறவும் செய்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவோ, தனக்கும் புதிய அரசியலமைப்புக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாததுபோலவே செயற்படுகின்றார். அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் எந்தளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது என்று கேட்டால், ‘அது பற்றி தனக்கு முழுமையாக ஒன்றும் தெரியாது. அந்த விடயங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் கவனித்துக் கொள்கின்றார்’ என்று கூறித் தப்பித்துக் கொள்வார்.
அதற்குக் காரணம் நிச்சயமாக புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படப் போவதில்லை என்றும், அவ்வாறு அது நிறைவேறாத பட்சத்தில் ஏற்படக்கூடிய விமர்சனங்கள், தூற்றல்களை பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஜனரிபதியின் உள் நோக்கமாக இருக்கலாம்.
ஆனால் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக ஜனாதிபதி கண்டியில் பௌத்த மதத் தலைவர்களை சந்தித்தபோது, ‘எந்தவொரு அரசியலமைப்பும் பௌத்த மதத் தலைவர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்’ என்று கூறியதையும், மட்டக்களப்பில் உரையாற்றும்போது, ‘யார்? என்ன கூறினாலும் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றியே தீருவேன்’ என்று கூறினார்.
இவ்வாறாக யாருக்கு மத்தியில் உரையாற்றுகின்றாரோ அவர்கiளைச் சமாளிக்கும் வகையில், கருத்துக்களைக் கூறிவிட்டு வருகின்றவராகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார். ஆகையால் ஜனாதிபதி கூறுகின்ற விடயங்கள் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடா? என்பதையிட்டு ஒரு தீர்மானத்திற்கு மக்களும், சர்வதேசமும் வருவது கடினமானதாகும்.
அதுபோலவே நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது தொடர்பாகவும் அரசாங்கம் விழி பிதுங்கிப்போய் இருக்கின்றது. என்ன? செய்வது என்று நல்லாட்சி அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. முன்னைய அரசாங்கம் வாங்கிய கடன்களையே இந்த அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமை நல்லாட்சி அரசின் தலையிலேயே விழுந்துள்ளது என்று அரசாங்கம் கடந்த இரண்டு வரடத்திற்கும் மேலாக தனது இயலாமையை நியாயப்படுத்த முயற்சிக்கின்றது.
பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் நாடுகளின் வரிசையில் 83ஆவது இடத்திலிருந்த இலங்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 92 ஆம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பின்னடைவினால் இலங்கை ரூபாவின் பெறுமதியானது, அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு ஈடு கொடுக்கமுடியாதுள்ளதால் டொலரின் பெறுமதியானது, தற்போது 152 ரூபாவாக உயர்ந்துள்ளது. இந்த நிலையிலிருந்து டொலரின் பெறுமதியை 148க்கு குறைக்கும் முயற்சியை இலங்கை அரசு எடுக்கவேண்டும். அவ்வாறில்லாமல் தற்போதைய நிலைமையே தொடருமாக இருந்தால், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி 158 அல்லது 160 ரூபாவாக உயருமாக இருந்தால், இலங்கையில் பொருளாதாரம் கட்டுப்படுத்த முடியாத வீழ்ச்சியை அடைந்து விட்டது என்பதே கணிப்பாகும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டை தூக்கி நிறுத்துவதற்கு அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்பார்த்து நிற்கின்றது. ஆனால் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வெளி நாட்டு முதலீட்டாளர்களும் பின்வாங்குகின்றனர். தற்போதைக்கு சீனா மட்டும்தான் இலங்கையில் முதலீடுகளைச் செய்ய தயாராக இருக்கின்றது. சீனாவுக்கு போட்டியான முதலீட்டாளர்களை இலங்கை கவர வேண்டுமாக இருந்தால், இலங்கை முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வரப்பிரசாதங்களை அறிவிக்க வேண்டும்.
ஆனால் தற்போதைக்கு வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு இலங்கையிடம் எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கத்திடம் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு இருப்பது சுற்றுலா மையங்களாகவும், வர்த்தக மையங்களாகவும் இனங்காணப்பட்ட நிலங்களை நீண்ட நாட்கள் குத்தகைக்கு வழங்குவதுதான்.
அந்த வகையிலேயே ஹம்பான்தோட்டை, திருகோணமலையில் சீனன்குடா, கொழும்பில் காலிமுகத்திடல் போன்ற முக்கியமான பகுதிகளில் நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது.
ஆனாலும் தற்போதைக்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையற்ற அரிசியல் நிலைமையை கருத்தில் கொண்டு வெளிநாட்டு முதலீட்டளர்கள் பின்வாங்கிச் செல்கின்றனர். கட்சி வேறுபாடுகளாலும், அதிகாலப் போட்டியாலும் பாம்பும் கீரியுமாக பிரதமரும், ஜனாதிபதியும் இருந்தாலும், தமது முரண்பாடுகளை உயர்த்திப்பிடித்து அரசியல் குழப்பத்தை தோற்றுவித்தால், தமக்கே ஆபத்தாகி தமது முதல் எதிரியான மகிந்த ராஜபக்சவிற்கு வாய்ப்பாகிவிடும் என்றும் அஞ்சுகின்றார்கள்.
மகிந்த ராஜபக்ச நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகாரத்தை கைப்பற்றுவாராக இருந்தால், அது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால, பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா மற்றும் சில அமைச்சர்களுக்கு நாட்டைவிட்டு ஓடும் அளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதை இவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றார்கள்.
எனவே வெளியே என்னதான் கதைத்தாலும், அதிகாரச் சூழலை சீர்குலைத்துவிடாமல், அதைத் தொடர்வதற்கே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு சவாலாக இருப்பது உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதா? இல்லையா? என்பததான். என்னதான் காரணங்களைக் கூறிக்கொண்டு, உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது.
அரசாங்கம், மகிந்தவுக்குப் பயந்து உள்ளுராட்சித் தேர்தலை தள்ளிப்போடுமாக இருந்தால், சிவில் அமைப்புக்கள் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுகின்ற நிலைமை தலைதூக்கும். எனவே ஒரு கட்டத்திற்குப் பிறகு அரசாங்கம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்படுமாக இருந்தால் அதில் நல்லாட்சியில் முரண்பாடுகளுடன் இருக்கும் கட்சிகள் தத்தமது உறுதித் தன்மையை வெளிப்படுத்துவதற்காகப் தேர்தலில் தமது தனித்துவத்துக்காக போராடவேண்டிய கட்டாயம் ஏற்படும், அங்கே இருந்து கட்சி வேறுபாடுகளும், வர்ண வேறுபாடுகளும் ஆட்சியை ஆட்டம் காணச் செய்யும்.
இதற்கிடையே இதுவரை புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்துவந்த சிறி லங்கா சுதந்திரக் கட்சியினர், தற்போது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு தாமும் ஆதரவு தெரிவப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள்.
ஆதரவு தெரிவிப்பதன் உள் நோக்கம் என்ன? என்பதை ஆராய வேண்டும். இந்த சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடையுமானால், அதன் பிறகு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் மக்கள், சிங்கள மக்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாத சூழல் ஏற்படும். அத்தகைய இறுக்கமான எதிரொளிப்பை ஏற்படுத்தவே சிறி லங்கா சுதந்திரக் கட்சியினர் திட்டமிடுகின்றார்களா? என்ற சந்தேகமும் தவிர்க்கப்பட முடியாததாகும்.