மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சரத்குமார் படம் பார்த்தார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமார், விக்ரம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் சரத்குமார் ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் படத்தை கண்டுகளித்தார். அதனை தொடர்ந்து ரசிகர், ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக காண்பது சிறப்பு. கல்கியின் கதை தெரிந்தவர்கள் இத்திரைப்படத்தை எளிதாக அறிந்து கொள்வர். சோழர்கள் ஆட்சி காலத்தை நினைவுபடுத்தும் விதமாக திரைப்படம் அமைந்திருப்பது சிறப்பு. வெளிநாட்டவர்களுக்கு தாஜ்மஹாலை காட்டுவதை விட, சோழ நாடு எப்படி இருந்தது என்பதற்கு திரைப்படம் உதாரணம். பொருளாதார பெருக்கம், நீர்வளப்பெருக்கம், வெளிநாடு வணிகம், போரிடுவது எவ்வாறு என்பதற்கு சோழர்கள் ஆட்சி காலமே சான்று.
இத்திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த நான் மிஸ்டர் மெட்ராஸ் என்பது பெருமை. ஆசையை தூண்டும் விதமாக மிக பிரம்மாண்டமாக இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து வருகிறேன். மக்கள் சிறப்பாக வாழ எது இருக்க வேண்டும், நீக்க வேண்டும், சேர்க்க வேண்டும், கோர்க்க வேண்டும் என்பதை அறிந்து தெளிவாக விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.