மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
இப்படம் வெளியான முதல் நாளிலே நல்ல வசூலை அள்ளியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.