சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நடித்து வரும் மெகாத் தொடர் இலக்கியா.
இந்த தொடர் அக்டோபர் 10-ம் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சந்திரலேகா தொடர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து அக்டோபர் 10-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகாத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த மெகாத் தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
இதில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமாபிந்து, சுஷ்மா, டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சரிகம இண்டியா லிமிட் சார்பாக பி.ஆர். விஜயலட்சுமி தயாரிக்கும் இந்த தொடரை சாய் மருது இயக்குகிறார். இதன் கதையை சரிகம கதை இலாகாவும், திரைக்கதையை சேக்கிழார் எழுத, வசனத்தை குரு சம்பத்குமார் எழுதுகிறார்.
தந்தை கைவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அத்தை சிந்தாமணி எப்போதும் அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள். சிறு வயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறாள், தான் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள். இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள். கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள். நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.
இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப் பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள். அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது.