பெப்ரவரி மாதத்தைப் பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம்.
பெப்ரவரி 4ம் திகதி எமது நாடு விடுதலை பெற்ற தினம். இத்தினம் பற்றி பள்ளிப் பருவ மாணவர்கள் முதல் வயோதிபர்கள் வரை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஆனால் பலர் அத்தினம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் எமது இளைஞர்கள் பெப்ரவரி 14ம் திகதியை நன்றாக நினைவில் வைத்துள்ளனர்.
வாலிபர்கள், வயோதிபர்கள் என்று பலரும் பூச்செண்டு, பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். விஷேடமாக வாலிபர்கள் தங்களுடைய காதலை புனிதப்படுத்தக் கூடியதாக அத்தினத்தை பூஜிக்கிறார்கள்.
தமது பிறந்த நாளை மறந்து விட்டாலும் ‘காதலர் தினத்தை’ மறந்து விட முடியாத நிலையில் இத்தினம் பிரசித்தம் பெற்று விட்டது. இது இன்றைய தலைமுறை மாற்றம்.
காதல்‘ என்பது மனித வாழ்க்கையின் உன்னதமான அனுபவம். கவிஞர்களும், ஓவியர்களும், இலக்கியவாதிகளும், தத்துவமேதைகளும் காதல் வயப்பட்டு உணர்வுகளை அவர்களது நடையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
நம்முடைய ஆழ்மனதை மற்றொருவருக்குத் தரும் போது பரவசமான உணர்வு நம்மை வியாபிக்கிறது. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் காதல்’ என்கிறார்கள் அறிஞர்கள்.
மனித இனத்திற்கு களங்கமில்லாத, சுயநலமில்லாத பரவசத்தைத் தரக் கூடியது காதல். அது ஏற்படுத்தும் மயக்கம் அற்புதமானது.
உலகத்திலிருந்து விடுபட வைத்து இருவருக்கும் இடையே சுகமான உணர்வை ஏற்படுத்தக் கூடியது காதல்.
சங்க இலக்கியங்களில் காதல் மணம் பற்றி கூறப்பட்டுள்ளது. பழந்தமிழர் காதலைப் போற்றியுள்ளனர். வள்ளுவர் காமத்துப்பாலில் அன்பின் ஆழத்தைப் புலப்படுத்தியுள்ளார்.
குறிப்பு அறிதல்’ என்ற அதிகாரத்தில் ‘கண்ணொடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும்இல’ என்கிறார்.
இதன் அர்த்தம் காதலர் இருவரின் கண்களும் பார்வையால் ஒன்றாகி விட்டால் அங்கே வாய்ப்பேச்சு தேவையில்லை என்பதாகும்.
‘காதல் சிறப்பு உரைத்தல்’ என்ற அதிகாரத்தில் ‚உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு‘ என்கிறார். (எனக்கும் என் மனைவிக்கும் உள்ள தொடர்பு உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது).
கம்ப இராமாயணத்தில் ‚அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என ராமன்-சீதையின் முதல் காதலை கம்பர் அழகாகச் சித்தரித்துள்ளார்.
‘காதலித்துப்பார்’ என்கிறார் கவிஞர் வைரமுத்து. ‚காதல் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தெளிவையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல சிநேகிதியையும் கொடுக்குமாயின் சாகும்வரை காதலித்துக் கொண்டே இருக்கலாம்’ என்கிறார் பாலகுமாரன்.
கி.பி.207 இல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ், ரோமானிய வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் என கருதினார்.
ஆகவே படையில் சேரும் இளைஞர்களுக்கு ‚திருமணம் ஆகியிருக்கக் கூடாது; காதலிக்கக்கூடாது’ என சட்டமிட்டார் மன்னர்.
காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் இரகசியமாகக் காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த ‘வலன்டைன்’ என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்தார்.
விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், பாதிரியாராலேயே காதலிலிருந்து தப்ப முடியவில்லை.
சிறை அதிகாரியின் பார்வை இழந்த மகள் அவருக்கு பணிவிடை செய்ய, காதல் மலர்ந்து விட்டது.
‚இறைவா! இந்தப் பெண்ணுக்கு பார்வை கொடு!’ என்று வேண்டி சிறையில் தவம் இருந்தார் வலன்டைன். பெண்ணுக்குப் பார்வை கிடைத்தது.
இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னர் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியாரின் தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பாதிரியார் வலண்டைன் கொல்லப்பட்ட நாள் பெப்ரவரி 14 ஆகும்.
‘வலண்டைன்ஸ் டே’ குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள கதை இது.
காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர். இன்றைய யுவதிகளும் அவ்வாறே பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.
“நட்பு தூய்மையானது. ஆண் பெண் உறவு புனிதமானது. அதனை கொச்சைப்படுத்தக் கூடாது” என்று அழகிய வார்த்தையில் காதல் பற்றிப் பேசலாம், கதைக்கலாம், வாதிக்கலாம்.
ஆனால் நடைமுறையில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.காதலித்துக் கைவிடப்பட்ட எத்தனையோ அபலைப் பெண்களை பார்க்கிறோம். அதே போல கைவிடப்பட்ட ஆண்களையும் காண்கிறோம்.
யுவதிகளை சீரழித்த எத்தனையோ கயவர்களையும் காண்கிறோம். ஏமாற்றப்பட்டு விட்டோம் எனக் கதறிஅழும் கன்னியர்களையும் கண்டிருக்கிறோம்.
மானம் போய் விட்டதே என்று தற்கொலை செய்து கொள்ளும் அப்பாவிப் பெண்களையும் கேள்விப்படுகிறோம்.
மகள் ஏமாற்றப்பட்டு விட்டாளே என்று உயிரை மாய்த்துக் கொள்ளும் பெற்றோரையும் பார்க்கிறோம்.
காதலியுடன் தனித்திருந்த காட்சிகளைப் புகைப்படம் எடுத்து மிரட்டும் காதலன்; அதனை இணையத்துக்கு விட்டு பணம் பறிக்கும்- சம்பவத்தையும் பார்க்கிறோம்.
காதலாலும் அதன் புனித தினத்தினாலும் உருவான விபரீதங்கள் இவை என எண்ணத் தோன்றுகின்றது.
ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால், அதற்காகத்தான் காதலர் தினம் என்றால் அப்படிப்பட்ட தினத்தை கொண்டாடவே தேவையில்லை.
ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை மனித குலம் தடுக்கவில்லை.
பிள்ளைகளின் விருப்பப்படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென பெற்றோர் எண்ணுவதுண்டு. இதற்காக இவர்கள் வேலி தாண்டிப் போக வேண்டுமென்று கூறவில்லை.
உங்களது இணையை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு நேசம் வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்.
காதலில் ஜெயித்தவர்களை விட தோற்றவர்கள் அதிகம். கடந்த காலத்தையே நினைத்து பரிதவித்துக் கொண்டு இருந்தால், நிகழ்காலம் கைவிட்டுப் போய் விடும்.
மாற்றம் என்பது முடிவல்ல, முற்றுப்புள்ளியும் அல்ல; புதிய ஆரம்பம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது காதலர் தினம் நம் முன்னால் வருகிறது. நம்நாட்டுக் கலாசாரம் காதலைப் புனிதமாக மதிக்கிறது.
ஆரோக்கியமாக உண்மையான அன்பை தன்னலமில்லாத அன்பைச் செலுத்தி கொண்டாடுவதில் தவறில்லை.
உண்மைக் காதலுக்கு ஆதரவு காட்டுவோம். எதிர்பார்ப்பு இல்லாத அன்பை வாரி வழங்குவோம்.