பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.
வன்முறைக்கு இடமளிக்க முடியாது
பல்கலைக்கழகத்திலோ – வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள், அது தொடர்பிலான பெற்றோரின் முறைப்பாடுகள் மற்றும் அங்கு இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (05.10.2022) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர். அதில் ஒரு சிலரது மனித உரிமை பற்றி கவனம் மேற்கொள்வதா அல்லது 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதா என்பது தொடர்பில் கற்றவர்கள் நன்கு அறிவர்.
அரசியல் தீயை மூட்ட வேண்டாம்
அரசியல் நோக்கத்திலும் பல்வேறு நோக்கங்களிலும் ஒருசிலர் பல்கலைக்கழகங்களினுள் செயற்பட்டு வருகின்றனர். தயவு செய்து அங்கு அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
பேராதனைச் சம்பவங்கள் தொடர்பில் எனக்குப் பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து 600 இற்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்துள்ளன. மனித உரிமையை நாம் மதிக்கின்றோம்.
எனினும், குறுகிய நோக்கங்களுக்காகச் செயற்படுபவர்களையும் மற்றும் வன்முறைகளையும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.