மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய ரஜினி, கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.
பொன்னியின் செல்வன்
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்து விட்டு கார்த்திக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விக்ரம் – கமல்ஹாசன் – கார்த்தி
இது குறித்து கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சினிமாவில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்க எங்களை எப்போதும் ஊக்குவித்து வருகிறீர்கள் கமல் சார். அன்பையும் மரியாதையையும் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ரஜினி
மேலும், “ரஜினி சார் உங்கள் அழைப்பு எனக்கு ரொம்ப ஸ்பெஷல். பிறர் உழைப்பை அங்கீகரித்து அவர்களை மனதார பாராட்டும் உங்கள் அன்பு என்னை நெகிழச் செய்கிறது” என்று கூறியுள்ளார்.