ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மே 9 கலவரத்தின் காரணமாக தமது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மகிந்த நேற்று முதல் தடவையாக பொது மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது இந்தத் தகவலை வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் “ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற பேரணி ஒன்றை நடத்தியிருந்தார்.
மகிந்த வெளியிட்ட தகவல்
இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இன்று நாங்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். அந்த சவால்களை வெற்றிக் கொள்வதற்கான சக்தி எங்களுக்கு உள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். தேவைகளை அறிந்து கொண்டு அதற்கான செயற்பட வேண்டும். மக்கள் இன்று நல்ல அரசியல் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு
ரணிலுடன் இணைந்து செயற்பட வேண்டும். அன்று நாங்கள் ரணில் தவறானவர் என கூறினோம். ஆனால் இன்று அவர் எங்களுடன் உள்ளார். அதனால் நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரணிலுக்கு ஆதரவு வழங்கி செயற்பட வேண்டும்.
மக்களின் நன்மைக்காக அவருடன் நாங்கள் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.