இந்தியாவின் கொச்சியில் வைத்து ஈரானிய கொடியிடப்பட்ட கப்பலில் இருந்து இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் பெருந்தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஹெரோயின் இலங்கை வழியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள இலக்கு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்திய ஊடகத்தின் தகவல்
இந்தியாவின் உயர்மட்ட போதைப்பொருள் மற்றும் சுங்க அமுலாக்க அதிகாரிகளை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் பெறுமதி இந்திய பெறுமதியில் 1200 கோடி ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ஹெரோயின்களை கடத்துவதற்கு இந்திய துறைமுகங்களை பாதுகாப்பான இடங்களாக பயன்படுத்துகின்றனர்.
ஈரான்,பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகள் இந்தியா அல்லது இலங்கையிலிருந்து வரும் சரக்குகளை விட வெளிநாட்டு துறைமுகங்களில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனவே கடத்தல்காரர்கள் இந்திய துறைமுகங்கள், பாதுகாப்பானவை என்று கருதுவதாக இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
ஹெரோயின் கடத்தலில் மீண்டும் எழுச்சி பெற்றதற்கு ஆப்கானிஸ்தானில் அபின் விளைச்சல் மற்றும் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதே காரணம் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து நில எல்லை வழியாக ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிற இடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அத்துடன் கேரளா கடற்கரைக்கு அருகில் உள்ள அரபிக் கடல் ஆப்கானிஸ்தான் ஹெரோயின் கடத்தலின் முக்கிய வழித்தடமாக உருவெடுத்து வருகிறது என்று போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கூறியதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.