பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலி மோசடி செய்த பணத்தை துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்துவதாக கூறி வர்த்தகர்கள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ளவர்களை ஏமாற்றி திலினி பிரியமாலி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு இரண்டு நடைமுறை கணக்குகள் இருப்பதாகவம், ஒன்றில் 35,000 ரூபாயும் மற்றொன்றில் 65,000 ரூபாயும் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண் கோடீஸ்வரர்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்திற்கு என்ன ஆனது என்பதை அறிய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த கணக்குகளில் இருந்து அவர் கிட்டத்தட்ட 350 மில்லியனை திரும்பப் பெற்றதாக இரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை முதல் வாக்கு மூலம் பதிவு
இந்த பணம் யாருக்கு சென்றது என்பதை அறிய, வரும் நாட்களில் தன்மை தொடர்பு கொண்ட கோடீஸ்வரர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பிரபுக்கள் என ஏராளமானவர்களிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இது தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, அவரது நிதி நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகிக்கும் 35 பேரிடம் நாளை முதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தயாராகி வருகின்றனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேன ஆகியோரின் பணிப்புரையின் கீழ் விசேட பொலிஸ் குழுவொன்று இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.