- வருமான வரி செலுத்துவதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது.
- வருமானவரி செலுத்துவதில் பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு குடிமக்கள் செலுத்தும் வரிப்பணம் முக்கியமானது. இந்திய சுதந்திரப்போரின் போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும், சமூகத்தை கட்டமைக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் 1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் நாள் வருமானவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2010-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் வருமானவரி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வருமான வரி கணக்கீடு
வருமான வரி செலுத்துவதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. இந்திய மக்கள் தொகை யில் 48 சத வீதம் பெண்கள் உள்ளனர். இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெண்களின் பங்கு குறைவாகவே இருந்தது. பெண் தொழில் முனைவோர் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். சமீபகாலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பொருளாதார ரீதியாக விழிப்புணர்வோடு இருப்பதும், பொருளாதார பலத்தை அதிகரிப்பதும் அவசியமானது.
வருமானவரி செலுத்துவதில் ஆணும், பெண்ணும் சமம் என்றாலும், பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. வருமானவரியானது சம்பளம், சொத்து, தொழில், மூலதன ஆதாயங்கள், நிலையான வைப்புத் தொகை , சேமிப்புக் கணக்குகளில் இருந்து பெறப்படும் வட்டி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்படுகிறது.
கல்வி கட்டணம்
2.5 லட்சம் வரை வருமானம் உள்ள , 60 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு வரிவிகிதம் இல்லை. பெண்களில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 5 லட்சம் வரை வரிவிகிதம் இல்லை. பெண்கள் தங்கள் வருமானத்திற்கு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும். தேசிய சேமிப்பு சான்றிதழ், ஓய்வூதிய திட்டம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஈக்டிவிட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சே மிப்புத் திட்டங்கள், சுகன்ய சம்ரித்தி யோஜனா முதலியன இதில் அடங்கும். பெண்களின் கல்வி கடனுக்கு செலுத்தப்படும் மொத்த வட்டியில் இருந்து விலக்கு அனுமதிக்கப்படுகிறது.
உடல்நல காப்பீடு திட்டங்களுக்கு பிரிவு 80D சில வரம்புகளை முன்வைத்து வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கிறது. இதில் மகப்பேறு காப்பீடும் அடங்கும். இதன்மூலம் குறைந்தது ரூ.25,000 முதல் வரிவிலக்கு பெறலாம். காப்பீட்டு வருடாந்திர திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை க்கு ரூ.1,50,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டு விலக்கு அளிக்கப்படுகிறது. உடல் ஊன முற்றோர் மற்றும் மனநல குறைபாடு உடைய பெண்களுக்கான மருத்துவச் சிகிச்சையில் 40 முதல் 80 சத வீதம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.
வரிசெலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாத பெண்களும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யலாம். வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடியேற விரும்பினால், நீங்கள் செலுத்தியுள்ள வருமான வரி தாக்கல் படிவம் உதவும். வீட்டுக் கடன், கார்கடன், மற்றும் இதர கடன்களுக்காக விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே வருமான வரி படிவம் தாக்கல் செய்ததற்கான விபரங்களை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்று பல நேரங்களில் வருமானவரி தாக்கல் விவரங்கள் நமக்கு கை கொடுக்கும்.