சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இது சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆகும்.
சாம்சங் நிறுவனம் கேல்கஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், வென்னிலா கேலக்ஸி S23 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனில் S22 மாடலில் வழங்கப்பட்டு இருந்த 6.1 இன்ச் FHD டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புது மாடலில் பாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்த்த அளவுக்கு வழங்கப்படாது என்றே தெரிகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி S23 மாடல் நான்கு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இதேபோன்று லீக் ஆன ரெண்டர்களில் கேலக்ஸி S23 வைட் நிறம் கொண்டிருந்தது.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனில் 3900 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S22 மாடலில் 3700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய மாடலில் 25 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்கிரீன் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கேலக்ஸி S23 சீரிசில் டாப் எண்ட் மாடலான S23 அல்ட்ரா 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு, 10MP டெலிபோட்டோ கேமரா, 40MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.