நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதேசமயம் திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது சலசலப்பை கிளப்பி பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தில் இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது. எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது? என விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா? தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா எனவும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மருத்தவமனையில் விசாரனை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விசாரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளனர்.
கர்ப்பகாலத்தில் தாய் மற்றும் சேய் இருவரின் உடல்நிலையை கண்கானிக்க கூடிய சுகாதாரத்துறையுடைய ‘பிக்மி’ வரிசை எண்ணை நயன்தாரா பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று தகவல் வெளியாகி உள்ளது.