தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் வைஷாலி.
இவர் கடந்த 15-ந் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி தாக்கர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த இவர், கடந்த 15-ந் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை வைஷாலி தற்கொலை செய்த அறையை சோதனை செய்த போலீசார் குறிப்பு ஒன்றை கைப்பற்றினர். அதில், சில காலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷாலி வருங்கால கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின், ஒரு மாதத்திற்கு பிறகு அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என்று தெரிவித்தார். மேலும், கடந்த ஜூனில் நடக்க இருந்த இவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோவையும் நீக்கினார்.
இந்நிலையில், வைஷாலியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் காதலரான ராகுல் நவ்லானி மற்றும் அவரது மனைவி திஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்டை வீட்டில் வசித்து வந்த ராகுலை இந்தூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். தொழிலதிபரான அவருடன் வைஷாலி கடந்த காலத்தில் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அடுத்து வைஷாலியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதுடன், அவர் திருமணம் செய்ய விடாமலும் தடுத்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதுபற்றி காவல் துறை ஆணையாளர் ஹரிநாராயணாச்சாரி மிஷ்ரா கூறும்போது, வழக்கு பதிவான பின்பு, ராகுல் காணாமல் போய் விட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகுலுடனான வைஷாலியின் தொடர்பு பற்றி நடிகையின் குடும்பத்தினருக்கு தெரியும். வைஷாலி பற்றி ராகுலே வதந்திகளை பரப்பியுள்ளார் என குடும்பத்தினர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.
மணமகனாக வருபவர்களிடம், தன்னுடனான தொடர்பு பற்றி கூறியும், வைஷாலியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியும் வந்துள்ளார். இதனாலேயே பல் மருத்துவருடனான திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு யாருடனாவது திருமணம் செய்து வைக்க வைஷாலி குடும்பத்தினர் முயலும்போதும், இதே வேலையில் ராகுல் ஈடுபட்டு உள்ளார் என அவர் கூறியுள்ளார்.