- சேட்டன் சர்மா தேர்வு குழு தலைவராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதிய தேர்வாளர்களை பொறுத்து நியமனத்தில் மாற்றம் வரலாம்.
இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் சேட்டன் சர்மா தலைவராக உள்ளார்.
தேபாசிஷ் மொகந்தி, ஹர்வீந்தர்சிங், சுனில் ஜோஷி ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக உள்ளனர். மேற்கு மண்டல தேர்வாளர் அபய் குருவில்லா கடந்த பிப்ரவரி மாதம் வெளியேறினார். அவரது இடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் தேர்வு குழுவை மறு சீரமைப்பு செய்து அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா கூறும் போது, ‘கிரிக்கெட் ஆலோசனை குழுவை (சி.ஏ.சி.) நாங்கள் விரைவில் அமைப்போம். அதன் நடைமுறையை பின்பற்றி புதிய தேர்வு குழுவை நியமிப்போம்’ என்றார்.
தென் மண்டல தேர்வாளர் சுனில் ஜோஷி, மத்திய மண்டல தேர்வாளர் ஹர்வீந்தர் சிங் ஆகியோர் வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் டிசம்பர் மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சேட்டன் சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட தேர்வு குழு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு பதிலாக 3 புதுமுகங்கள் நியமிக்கப்படுகிறார்கள். தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா, தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் மட்டுமே நீடிப்பார்கள்.
20 ஓவர் போட்டிகள் தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்த போட்டி குறித்து நன்கு அறிந்தவர்கள் தான் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
சேட்டன் சர்மா தேர்வு குழு தலைவராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய தேர்வாளர்களை பொறுத்து நியமனத்தில் மாற்றம் வரலாம். கிரிக்கெட் வாரிய விதிப்படி தேர்வு குழு உறுப்பினர்களில் யார் அதிக டெஸ்டில் விளையாடி இருக்கிறார்களோ அவர்கள் தான் தேர்வு குழு தலைவராவர்.