- 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
- பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.
”பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
முன்பெல்லாம் குழந்தைகளை, குழந்தைகளாகவே வளரவிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியா? அவர்களை என்ஜினியராக்கப் போகிறேன், டாக்டராக்கப் போகிறேன் என்ற பெருமையோடு பெற்றோர் அவர்களிடம் விலையாகக் கேட்பது குழந்தைகளின் குழந்தைமையை!
நம் பிள்ளைகள் படிப்பதற்காகவும் ஜெயிப்பதற்காகவும் மட்டுமே பிறக்கவில்லை. உலகின் அத்தனை மகிழ்ச்சிகளையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள். அதற்கான உரிமைகள் உண்டு.
எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளின் அறிவுத் திறனறிந்து அதற்கேற்ற கல்வித் திட்டத்தில் சேர்க்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். சமச்சீர் கல்வியில் படிக்கவே சிரமப்படும் குழந்தையை, CBSE அல்லது ICSE படித்தால்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும் என்று தாங்களாகவே முடிவெடுத்து, அந்தக் குழந்தையையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எத்தனை பெரிய பிழை?
முயலாமலிருப்பது தவறுதான். ஆனால், பெரும்பான்மையான குழந்தைகள் தம் இயலாமையோடு போராடிக் கொண்டிருப்பதை கண்டிப்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்.தனக்கு கடினமாக இருக்கும் பாடங்களை படிப்பதில் அவர்கள் படும் சிரமங்களையும், அதை எதிர்கொள்ள இயலாமலும், தன்னுடைய பயத்தை பகிர்ந்து கொள்ள முடியாமலும் அந்தக்குழந்தை எதிர்கொள்ளும் அன்றாட சவால்களை பெரியவர்களான நாம் சரியாக கவனிப்பதில்லை.
பிடிக்காத செயலை, அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலும் செய்யச் சொல்லி வற்புறுத்தும்போது குழந்தைகள் வாடித்தான் போகிறார்கள். கொஞ்சமும் இளைப்பாற நேரமின்றி, பள்ளி முடிந்ததும், மியூசிக், டான்ஸ், ட்ராயிங் என ஏதோ ஒரு பயிற்சி வகுப்பு, பின்னர் டியூஷன் என்று ஓடிக்கொண்டே இருப்பதால், பிள்ளைகள் விளையாட ஏங்குவதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
மனம் களைப்படையாமல் இருக்க, வீடியோ கேம் விளையாண்டு தனிமையை மறக்க முயற்சிப்பதால் ஏற்படும் விளைவு, மனப்பதற்றம். தன்னால் படிக்க முடியாது, எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்ற விரக்தியில் அடுக்கடுக்கான எதிர்மறை எண்ணங்கள் அவனை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் அதீத எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.
இவர்களில் பெரும்பாலும் பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள். தமக்கென்று ஒரு நண்பர் கூட்டம் சேர்த்து கொள்வதும் அதில் தன் நிலையை ஒப்பிட்டுக் கொள்வதும் இந்த பருவத்தில்தான் வேகமெடுக்கிறது.
கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.