- கிரகண நேரத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம்.
- கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.
25.10.2022 அன்று மதியம் 2.28 மணி முதல் கிரகண அமைப்பு உருவாகத் தொடங்கினாலும், உச்ச பரிணாமமாகத் தெரிவது மாலை 5 மணிக்கு மேல்தான்.
சூரிய கிரகண ஆரம்ப காலம் மாலை 5.14 மணி.
சூரிய கிரகண மத்திய காலம் மாலை 5.42 மணி.
சூரிண கிரகண முடிவு காலம் மாலை 6.10 மணி.
கிரகணம் என்பது வானில் தோன்றுகின்ற ஒரு அதிசய, அற்புத நிகழ்வு. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும் பொழுது ஏற்படுகின்ற நிகழ்வுதான் ‘கிரகணம்’ என்று சொல்வார்கள். ஆற்றல் நிறைந்த கிரகண காலத்தில் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு கிரகண காலத்திலும் கவனமுடன் இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் பற்றிப் பஞ்சாங்கம் மூலமாக எடுத்துரைத்திருக்கின்றார்கள்.
தோஷம் பெறும் நட்சத்திரங்களுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்வது என்பதை நாம் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது இந்த சுபகிருது ஆண்டில் ஐப்பசி மாதம் 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை (25.10.2022) அன்று `பார்சுவ சூரிய கிரகணம்’ ஏற்படுகிறது. அன்றைய தினம் சுக்லபட்சம் பிரதமை திதியில் ராகுவிற்குரிய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில், துலாம் ராசியில் கேது கிரகஸ்தம் கூடிய நேரத்தில் கிரகணம் ஏற்படுகிறது.
இந்தக் கிரகணத்தால் தோஷம் பெறும் நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகியவை என்பதால், அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தோஷ நிவர்த்திக்குரிய வழிபாடு, பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
கிரகணத்தை நேராகக் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகண ஆரம்பத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அல்லது கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.
கர்ப்பிணிப் பெண்கள், கிரகண நேரத்தில் உடலில் சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. ஏனென்றால் அந்த நேரத்தில் ஏற்படுகின்ற கதிர்வீச்சின் தாக்குதலால் வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கிரகண நேரத்தில் உடலில் உள்ள ஜீரண பகுதிகள் வலிமை இழக்கும். எனவே அப்போது திட உணவுகளை சாப்பிடக்கூடாது. பசி உள்ளவர்கள் திரவ ஆகாரங்களை சாப்பிடலாம். உணவுப் பொருட்களில் கிரகண கதிர் வீச்சுக்களின் தாக்கம் இல்லாமல் இருக்க, தர்ப்பைப் புல் போட்டு வைப்பது நல்லது.
உணவுப் பாத்திரம், தண்ணீர்ப் பானை போன்றவற்றின் மேல் தர்ப்பைப் புல் போட்டு வைக்கலாம். அல்லது வைக்கோல் துரும்பும் போட்டு வைக்கலாம். தர்ப்பைப் புல் எல்லாவிதமான தீய சக்தியில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மை கொண்டது. விஷ முறிவுச் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெறும் பொருளாகவும் அது கருதப்படுகிறது. எனவே தர்ப்பைப் புல்லை கையில் உள்ள மோதிர விரலில் சுற்றி வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் தலையில் ஒரு தர்ப்பைப் புல்லை சொருகி வைத்துக்கொள்ளலாம்.
இந்த கிரகண கால நேரம், ஒரு அருமையான நேரம் ஆகும். வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கோவில்களில் நடை மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் நடை திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னா் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
கிரகண நேரத்தில் நமது இல்லத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம். இந்த வேளையில் இறை நாமத்தை ஒருமுறை நாம் சொன்னால் ஆயிரம் முறை சொன்ன பலன் நமக்குக் கிடைக்கும். முற்காலத்தில் எல்லாம் கற்றுத் தேர்ந்த நம்பிக்கை மிக்க சீடர்களுக்கு கிரகண காலத்தில் தான் குரு உபதேசங்களை வழங்குவார். குரு மூலம் தீட்சை கிடைக்கும் நேரமாக இந்த நேரம் கருதப்படுகிறது. இறையருள் சித்திக்கும் இந்த நேரத்தில் இல்லத்தில் இறை நாமங்களை உச்சரிப்பது நல்லது.
இந்த நேரத்தில் எந்தெந்த நட்சத்திரங்களுக்குத் தோஷம் உருவாகிறதோ அந்த நட்சத்திரக்காரர்கள் கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்து ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். குளிக்கும் தண்ணீரில் கல்உப்பு ஒரு சிட்டிகை அளவு போட்டுக் குளிப்பது நல்லது. சூரிய கிரகணத்தால் உடல்நிலையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதிருக்க கல் உப்புப் போட்டுக் குளிக்க வேண்டும். சூரிய கிரகணம் என்பதால் சூரியனுக்குரிய கோதுமையைத் தானம் கொடுப்பதோடு, ஒரு தாம்பாளத்தில் ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு கொஞ்சம் வைத்து, அத்துடன் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு காணிக்கை வைத்து சூரியன் சன்னிதியில் தானம் கொடுத்து வழிபட்டு வருவது நற்பலன் தரும்.
கடன் சுமையின் காரணமாக தடுமாறுபவர்கள் வாங்கிய கடனில் ஒரு சிறு தொகையை இந்த நேரத்தில் உரியவர்களிடம் கொடுத்தால் கடன் முழுவதும் தீர வழிபிறக்கும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க உகந்த நேரம் இதுவாகும். கிரகண காலத்தில் மன ஒருமைப்பாடும், நேர்மறைச் சிந்தனையும் உங்கள் வாழ்வை வளப்படுத்தும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம் கிடைக்கும். இந்த நேரத்தை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுவாக இந்த கிரகண நேரம் வலிமையான நேரம் என்பதால் இல்லத்தில் இருந்து நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தெய்வீக சக்தி அதிகரிக்கும். அதே நேரம் நுண்கிருமிகளின் தாக்குதல் ஏற்படாமல் இருக்கவும், கதிர்வீச்சின் தாக்கம் உடலில் ஏற்படாதிருக்கவும் உணவில் கட்டுப்பாடு செலுத்தி வீட்டிற்குள்ளேயே கிரகணம் முடியும் வரை இருப்பது நல்லது.