இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கு ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட இருமல் சிரப் பாணி மருந்து மற்றும் திரவ மருந்துகள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒளடதங்கள் பதிவு
ஒளடதங்களை பதிவு செய்யும் போது மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களுக்கு மத்தியில் அனுமதியளிக்கப்படும் மருந்துகள் மாத்திரமே நாட்டில் இறக்குமதி செய்யப்படும் என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66 குழந்தைகளும் உட்கொண்ட சிரப் மருந்து இந்தியாவின் மைதன் பார்மக்யூட்டிக்கல்ஸால் (Maiden Pharmaceuticals) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
கடுமையான சிறுநீரக காயம்
இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போது இடம்பெற்ற விசாரணைகளின் படி இந்த ஆண்டு திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக காயத்தை ஏற்படுத்தும் (நச்சு) பொருட்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில (நச்சுத்தன்மை கொண்ட) டைதிலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் அதிகளவு இருப்பது தெரியவந்திருந்தது.
இந்நிலையில், இந்தோனேசியா உட்பட சில நாடுகள் குழந்தைகளுக்கான இருமல் சிரப் மருந்துகளுக்கு தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.