- கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் டென்சார் பிராசஸர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- டென்சார் பிராசஸரின் பென்ச்மார்க் புள்ளிகள் பற்றி கூகுள் நிறுவன மூத்த அதிகாரி அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் பென்ச்மார்க், டிஎக்ஸ்ஒ மார்க் உள்ளிட்ட சோதனைகளில் எவ்வளவு புள்ளிகளை பெறுகின்றன என்பதை அறிந்து கொள்வதில் ஸ்மார்ட்போன் வல்லுனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் அதிக ஆர்வம் செலுத்துவது வாடிக்கையான விஷயமாகி விட்டது. பல முறை இதுபோன்ற சோதனை முடிவுகள் ஸ்மார்ட்போன் வெற்றி, தோல்வியை முடிவு செய்ய உதவும் அளவுக்கு பேசு பொருளாகி விடுன்றன.
அந்த வகையில் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களில் உள்ள டென்சார் சிப்செட்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல பிராசஸர் இல்லை என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது. பென்ச்மார்க் சோதனைகளின் படி புதிய டென்சார் சிப்களை விட ஸ்னாப்டிராகன் அல்லது ஏ சீரிஸ் பிராசஸர்கள் பின்னுக்குத் தள்ளி அதிக புள்ளிகளை பெற்றதே இதற்கு காரணம் ஆகும். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “மேட் பை கூகுள்” போட்காஸ்ட் அமைந்துள்ளது.
“பாரம்பரியம் மிக்க் பென்ச்மார்க்குகள் ஒருகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சந்தை பல வழிகளில் அதிக முன்னேற்றம் அடைந்து விட்டது. கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை ஸ்மார்ட்போனிற்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதுவே மக்களுக்கு பயனுள்ள அம்சங்களை கொடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.”
“பென்ச்மார்க்குகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் போன்கள் பழக்கத்தில் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. பென்ச்மார்க் டெஸ்டில் அதிக புள்ளிகளை பெறுவதை விட செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை வெற்றிகரமாக பிக்சல் போனகளில் வழங்குவதே முக்கியத்துவம் வாய்ந்தது,” என கூகுள் சிலிகான் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு மூத்த இயக்குனர் மோனிகா குப்தா தெரிவித்து இருக்கிறார்.