பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி பல டாஸ்க்குகள் பல்வேறு திருப்பங்கள் என பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார். தொடர்ந்து இரண்டாவது நபராக கடந்த வாரம் அசல் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் இன்றுடன் 22 நாட்களை நெருங்கியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், ‘நான் தான் பிக்பாஸாக இருப்பேன்’ என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், ‘விவசாயத்திற்கு முக்கியத்துவம்’ கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸை இருந்து நடத்துவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புதிய வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது உண்மையா?, புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, “இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.
மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.” என்றார்.
மேலும், இந்த போட்டியை என்னை வைத்து நடத்த எந்த தொலைக்காட்சி முன் வந்தாலும் அவர்களுக்காக நான் ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.