- இளம்பரிதி சமீபத்தில் ருமேனியாவில் நடந்த உலக இளைஞர் செஸ் போட்டியில் (14 வயதுக் குட்பட்டோர்) வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹரிகிருஷ்ணா 2-வது இடத்தையும், குகன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சென்னை:
மீனா நினைவு முதலாவது சர்வதேச பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2 தினங்களாக நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 360 பேர் பங்கேற்றனர்.
9 சுற்றுகளை கொண்ட சுவிஸ் முறையில் நடந்த இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயதான இளம்பரிதி சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 8 புள்ளிகள் பெற்றார். இளம்பரிதி சமீபத்தில் ருமேனியாவில் நடந்த உலக இளைஞர் செஸ் போட்டியில் (14 வயதுக் குட்பட்டோர்) வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிகிருஷ்ணா 2-வது இடத்தையும், குகன் 3-வது இடத்தையும் பிடித்தனர். 3 வீரர்கள் தலா 8 புள்ளி பெற்றனர். டை பிரேக்கர் முறையில் இளம்பரிதி முதல் இடத்தை பிடித்தார். ஹரி மாதவன், அர்ஜூன், கிருஷ்ண மாச்சாரி, ஸ்ரீஹரி ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 4 முதல் 7-வது இடங்களை பிடித்தனர்.
முன்னாள் தேசிய செஸ் வீரரும், ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவன நிர்வாக இயக்குனருமான டி.வி. ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மொத்தம் ரூ.2 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் பெற்ற இளம் பரிதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.10 ஆயிரமும் கிடைத்தது. ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ரமேஷ், உயர்கல்வி இயக்குனர் பி.நடராஜன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.