ஆளும் பொதுஜன பெரமுன பிளவுபட்டுள்ளதுடன் தென்னிலங்கை அரசியல் அரங்கில் குழப்பமான சூழல், ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமைத்துவ வரிசையில் நாமல்
கட்சிக்குள் பசில் ராஜபக்சவின் செல்வாக்கு குறையும் நிலையில் தனது சிரேஷ்ட புதல்வர் நாமல் ராஜபக்சவை தலைமைத்துவ வரிசையில் அறிமுகப்படுத்துவதில் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராாஜபக்ச ஈடுபட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளும் கட்சியின் பெரும்பான்மையினர் விரும்பவில்லை எனவும் அதனால் அரசாங்கத்தை வீழ்ச்சியடைவிடக் கூடாது என்பதில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கட்சிக்குள் 25 உறுப்பினர்களுக்கு குறைவான உறுப்பினர்களைக் கொண்ட பசில் ராஜபக்ச அணியானது எண்ணிக்கையில் உயர்ந்து மீண்டும் ஒரு வலிமைமிக்க சக்தியாகத் திரும்புவதற்கு சாத்தியமில்லை.
மகிந்தவின் நம்பிக்கை
இந்த நிலையில் கட்சியின் தலைவரான, மகிந்த ராஜபக்ச ஏற்கனவே பொதுஜன பெரமுனவுக்குள் புத்துயிர் அளிக்க ஒன்றாக எழுச்சி என்ற கருப்பொருளில் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடத்தத் திட்டமிட்டுள்ள கூட்டத் தொடரின் மூன்றாவது கூட்டம் கடந்த வாரம் ஆராச்சிக்கட்டுவவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் கலந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடுத்த தேர்தலிலும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரையிலான மூன்று சந்திப்புக்களின் பின்னணியில் நாமல் ராஜபக்சவை தலைமைத்துவ வரிசையில் அறிமுகப்படுத்துவதே என்பது தெளிவாகின்றது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.