பிரபல போஜ்புரி திரைப்பட நடிகர் பவன் சிங்கின் மனைவி ஜோதி சிங் புகார் அளித்துள்ளார்.
கருக்கலைப்பு, தற்கொலைக்கு தூண்டி மனரீதியான பாதிப்பு ஏற்படுத்தினார் என பிரபல நடிகர் மீது அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
பிரபல போஜ்புரி திரைப்பட நடிகர் பவன் சிங் (வயது 36). இவரது மனைவி ஜோதி சிங், தனது கணவர் மீது போலீசில் அளித்துள்ள புகாரில், கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 6-ல் பவன் சிங்குடன் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு சில நாட்களில் பவன் சிங், அவரது தாயார் பிரதீமா தேவி, அவரது சகோதரி ஆகியோர் தனது தோற்றம் பற்றி கேலி செய்ய தொடங்கினார்கள். பவன் சிங்கின் தாயார் தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் தொகையை எடுத்து கொண்டார்.
அந்த பணம் தனது தாய் மாமனிடம் இருந்து பெற்றது. அதன்பின்னர் ஒவ்வொரு நாளும் தன்னை அவர் துன்புறுத்த தொடங்கினார். இந்த கொடுமைகள் போக, தற்கொலைக்கும் தூண்டினார்கள். கர்ப்பம் தரித்து இருந்தபோது, ஒரு மருந்து கொடுத்தனர். அதனை சாப்பிட்ட பின்பு, கர்ப்பம் கலைந்தது. மேலும் தினமும், தனது கணவர் குடித்து விட்டு வந்து, அடித்து துன்புறுத்தி, என்னை தற்கொலை செய்ய தூண்டினார்.
மனரீதியாக துன்புறுத்தியதுடன், மெர்சிடிஸ் பென்ஸ் ரக கார் ஒன்றை வாங்கி வரும்படி என்னை கட்டாயப்படுத்தினார். என்னிடம் புகாருக்கான அனைத்து சான்றுகளும் உள்ளன. அதனை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவேன் என ஜோதி சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில், பவனுக்கு எதிராக குடும்ப நீதிமன்றத்தில் தனது பராமரிப்பு செலவுக்கு தொகை தர வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜோதி சிங் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து கோர்ட்டு அளித்த நோட்டீசின்படி, வருகிற நவம்பர் 5-ந்தேதி பவன் சிங் கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு வெளிவந்த லாலிபாப் லகேலு என்ற பாடலால் பிரபலம் அடைந்த பவன் சிங்குக்கு 2014-ம் ஆண்டு நீலம் என்பவருடன் முதலில் திருமணம் நடந்தது. எனினும், 2015-ல் நீலம் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.