கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு பெங்களூர் சென்றுள்ளார்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
இதையடுத்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளதாக கர்நாடக முதல் மந்திரிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கவுள்ளதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். இவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
கர்நாடக ரத்னா விருதை வழங்கப்படும் 10-வது நபர் புனித் ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.