விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான்.
இவருக்கு இசைத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். இவர் கைவசம் தற்போது சசிகுமாரின் ‘காரி’, விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’ உள்ளிட்ட சில படங்களில் உள்ளது.
இந்நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் சார்பாக இசையமைப்பாளர் இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதுகுறித்து இமான் தனது பதிவிட்டிருப்பது, “இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனுடன் டாக்டர் பட்டத்தின் சான்றிதழ்களை பகிர்ந்துள்ளார். இசைத் துறையில் சிறந்த பங்காற்றியதற்காக இமானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் இமானுக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இதற்குமுன்பு சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பாக டி.இமானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.