- சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
- இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது, பேளூர் என்ற இடம். இது ஹோய்சாலப் பேரரசின் ஆட்சி காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆகும். இங்கு சென்னகேசவர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் முன் காலத்தில் ‘விஜயநாராயணர் கோவில்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திருமாலை முக்கிய கடவுளாகக் கொண்டிருக்கும் இந்த ஆலயம், வைணவர்களின் வழிபாட்டு யாத்திரையில் சிறப்பிடம் பெறுகிறது.
இந்த ஆலயம் ஹோய்சால அரசர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனன் என்பவரால், கி.பி. 1117-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் மூலவரான கேசவநாராயணர், கல்லால் ஆன பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர். சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த ஆலயம் மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. இந்த ஆலயம் அதன் சிற்ப வேலைப்பாடுகளினால் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் இரண்டு கர்பக்கிரகத்துடன் விளங்குகிறது. இரண்டாவது கர்பக்கிரகம் பின்னாளில் இணைக்கப்பட்டுள்ளது. இதிலும் கேசவநாராயணரே மூலவராக இருக்கிறார். இதனை, விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலாதேவி கட்டியிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது. இதனை ‘மகாஸ்தம்பம்’ என்றும், ‘கார்த்திகை தீபோற்சவ ஸ்தம்பம்’ என்றும் அழைக்கிறார்கள். சென்னகேசவப் பெருமாள் கோவிலில் பக்தர்களை கவர்ந்திருக்கும் சிறப்பம்சம் கொண்டதாக இந்த தூண் விளங்குகிறது. ஏனெனில் இந்த தூணுக்கு அடித்தளம் இல்லை. ஒரே கல்லால் செய்யப்பட்ட மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தத் துண், அதன் அடிப்பாக மேடையை தொடாமல் உள்ளது. இதனை இடையில் ஒரு தாளையோ, துணியையோ விட்டால், மறு மூலையில் அதனை எடுக்க முடியும். இந்த ஸ்தம்பம், பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத புதிராகவே இருக்கிறது.