பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் இலங்கை அரசு 18 மாதகால கால அவகாசத்தைக் கோரவுள்ளது எனத் தெரியவந்திருந்தது.
இந்நிலையில், கால அவகாசத்தைக் கோருவது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிக்கும் முகமாக மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை ஜெனிவாவுக்கு அனுப்ப இலங்கை அரசு தீர்மானித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
குறித்த குழுவில் நீதித்துறையில் பாண்டித்தியம் பெற்ற இருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஐ.நாவில் இருக்கும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் நிக் கெலியை சந்தித்து இலங்கையின் கால அவகாசத்தை கோரிக்கை தொடர்பில் மேற்படி குழுவினர் விளக்கமளிக்கவுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இதுவரை அந்நாட்டின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிக்கவில்லை. இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிலவேளை, அமெரிக்கா மௌனம் சாதிக்கவும் இடமுள்ளது எனக் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐ.நாவில் கால அவகாசத்தைக் கோருவதற்கு இந்தியாவின் ஆதரவையும் இலங்கை அரசு கோரியுள்ளது எனத் தெரியவருகின்றது.