உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்பா.
ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானார்.
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாகி 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். இவரின் நடிப்பால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த 2000-ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா ரஜினி, அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார்.
நேற்று திடீரென ரம்பா தான் சென்ற கார் விபத்துக்கு உள்ளானதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் தானும் தனது குழந்தைகளும் சிறிய காயத்துடன் உயிர் தப்பியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தனது குழந்தை சாஷா மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டு கொண்டார்.
இந்நிலையில் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரம்பா வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் நன்றி, நாங்கள் விரைவில் குணமடைய வேண்டிய அனைவருக்கும் ரொம்ப நன்றி. நாங்க எல்லோரும் நலமாக இருக்கிறோம். சாஷா நலமாக இருக்கிறாள். நான் ரொம்ப கொடுத்து வச்சவ எல்லாரும் எனக்காக பிராத்தனை செய்றீங்க. எனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.