தமிழக அரசியல் களம் ஒருவாரத்திற்கும் மேலாக சூடு பிடித்துள்ளது. அதிமுக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில், சினிமா கலைஞர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான ராமராஜன், தியாகு, மனோபாலா ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். இப்படியாக அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.
மீடியாக்களிலும் இந்த செய்தி வெளிவந்தது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராகவா லாரன்ஸ் ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின.
ஆனால், ராகவா லாரன்ஸோ தான் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவரது இல்லத்திற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நான் சமீபத்தில் முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியதை, அவருக்கு நான் ஆதரவு அளிக்க சென்றதாக சொல்லி ஒரு செய்தி பரவி வருகிறது.
ஆதரவு தெரிவிப்பதற்காக அவரை நான் 0சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி தெரிவிக்கவே அவரை சந்தித்தேன்.
மற்றபடி, இந்த சந்திப்பு எந்த அரசியல் காரணங்களுக்காவும் நடைபெறவில்லை. நாங்கள் 1000 கிலோ கேக் வாங்கி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.