15 மில்லியன் டொலர் சிறப்பு இந்திய மானியத்தின் கீழ், பௌத்த உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முதன்மையான திட்டங்களை விரைவாக மேற்கொள்ள இலங்கையும் இந்தியாவும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கை
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய அரசாங்கத்தினால் 15 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இரண்டு தனித்தனி சந்திப்புகளை செவ்வாய்கிழமையன்று நடத்தியுள்ளார்.
பௌத்த உறவுகளை ஊக்குவித்தல்
பௌத்த உறவுகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண கலாசார நிலையத்தின் செயற்பாடு என்பன தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
2020 செப்டெம்பர் 26 அன்று நடந்த மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டில், இருதரப்பு பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறப்பு மானியமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை உயர்ஸ்தானிகரகம் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.