நடிகர் விஷால் சமீபத்தில் காசிக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.
காசி குறித்து அவர் பகிர்ந்துள்ள அனுபவ பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தன் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று பதிவிட்டுள்ளார்.
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.
தொடர்ந்து நடிகர் விஷால் ‘ஆன்மிக நோக்கத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது’ என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ”காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.