போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது, அதற்கடுத்து அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் என்ன நடந்தது என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களில் 73 நாட்கள், அங்கேயே இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். இவர் இப்போது அதிரடியான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கு முன்பாக, அந்த இரவில், அவருடைய வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் கீழே விழுந்துள்ளார். தூக்கிவிடக்கூட ஆள் இல்லாமல் அவர் தவித்துள்ளார். ஆனால், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தவர்களோ, ‘அம்மாவுக்கு ஒன்றுமில்லை’ என்றார்கள்.
மறுதினமே நான், அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அம்மா அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் பக்கத்து அறையில் என்னை அமரச் சொன்னார்கள். ‘அம்மாவுக்கு என்ன?’ என்று மருத்துவர்களிடம் நான் கேட்டபோது, அவர்கள் பதில் சொல்ல மறுத்து விட்டார்கள். ஆனால், அம்மாவின் காப்பாளர்களோ, ‘அம்மா நலமாக இருக்கிறார்… சீக்கிரம் வருவார்’ என்று கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
பல நாட்களாக நானும் அப்போலோ சென்று, காலை முதல் இரவுவரை அங்கேயே இருந்து விட்டு, வீட்டுக்குத் திரும்புவேன். அவருக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள் என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லை.
டிசம்பர் 5-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு ‘அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது’ என்றார்கள். இரவு ஏழு மணிக்கு நாங்கள் அங்கு சென்றோம். 8.30 மணி அளவில் பிரதாப் ரெட்டியும், ப்ரீதா ரெட்டியும் எங்களிடம் வந்தார்கள்.
‘ஸாரி… என்ன செய்வது? இனி, ஆண்டவனைப் பிரார்த்திப்போம். முதலமைச்சரின் இதயத்துடிப்பு நின்று விட்டது. செயற்கையாக இயக்க முயற்சி செய்கிறோம்’ என்றார்கள்.
அம்மாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே, செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் யார் யார் இருந்தார்கள் என்று அறிந்து, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்” என்று அதிரவைத்தார் பி.ஹெச்.பாண்டியன்.
பி.ஹெச்.பாண்டியனின் மகனும் அ.தி.மு.க-வின் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவருமான மனோஜ் பாண்டியனிடம் பேசினோம்.
டிசம்பர் 5-ம் தேதி இரவு அப்போலோவில் இருந்தோம். அப்போது, திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் அணிவது போன்ற கறுப்பு நிற முழுநீள கோட் அணிந்து கொண்டு மிடுக்காக சசிகலா நடந்து வந்தார். அவர் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை.
அன்றைய இரவு, அம்மாவுக்கு ஆபரேஷன் செய்யவேண்டும் என்று ஐ.சி.யூ-வுக்கு அவசரமாக ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். அப்போது, எங்களை ஒரு ரூமில் அடைத்து விட்டனர். அம்மாவைக் கொண்டு சென்றபின்… வெளியே வந்து பார்த்தபோது வழிநெடுகிலும் இரத்தம் சொட்டிக்கிடந்தது.
அம்மாவுக்கு என்ன நடந்தது என்று கடைசிவரை எங்களுக்குத் தெரியவில்லை. அம்மா இறந்த அன்று, சசிகலா குடும்பத்தினர் மருத்துவமனையில் காட்டிய பந்தாவை அனைவரும் பார்க்கத்தான் செய்தார்கள்” என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க வட்டாரத்தில் நாம் பேசியபோது, “செப்டம்பர் 22-ம் தேதி, இரவு 10 மணிக்குத்தான், போயஸ் கார்டனில் இருந்து அப்போலோவுக்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப் பட்டார்.
ஆனால், ஏழரை மணிக்கே தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க பிரமுகர் தேவேந்திரன் என்கிற தேவா தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் அப்போலோ முன்பாகக் குவிந்தனர்.
தேவேந்திரன், சசிகலாவுக்கு நெருக்கமானவராம். ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, அப்போலோ மருத்துவமனையின் முதல் தளம் மற்றும் 2-வது தளத்தில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவுக்கு உதவியாக அவருடைய வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தனர். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பிறகு… அந்த இரண்டு பெண்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை இல்லை.
வீட்டில் அன்றைய தினம் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது அந்த இரண்டு பெண்களுக்குத்தான் தெரியும்.
அப்போலோவில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம்வரை ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழு விவரங்களையும் அறிந்தவர் டாக்டர் பாலாஜி.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெலுக்கு, பேட்டிக்கு முன்பாக வகுப்பு எடுத்தவர் பாலாஜிதான். டாக்டர் பாலாஜி வாய் திறந்தால், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றனர்.