முச்சக்கரவண்டிகளுக்கு எரிப்பொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிகமாக ஐந்து லீட்டர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதிவு செய்ய இறுதி திகதி
கடந்த முதலாம் திகதி முதல் நாளை வரை இந்த பதிவு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மேல்மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கரவண்டி பணியகத்தின் பிரதானி ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
இதுவரை 5 லீட்டர் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம் இந்த பதிவு நடவடிக்கை ஊடாக 10 லீட்டராக அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டம் விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.