ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் சர்வதேச சந்தையில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஐபோன் 14 சீரிசில் மொத்தம் நான்கு மாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் டாப் எண்ட் மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 14 சீரிசில் விலை உயர்ந்த மாடலாக ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், டிசைனர்கள் உருவாக்கி இருக்கும் புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அதன் விலை காரணமாக ஆடம்பர பொருளாக மாறி இருக்கிறது.
டிசைனர்கள் உருவாக்கி இருக்கும் புது ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்புறத்தில் ரோலெக்ஸ் டேடோனா வாட்ச் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆடம்பர ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களை உருவாக்கி வரும் கேவியர் நிறுவனம் புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்-ஐ ஆடம்பர பொருளாக மாற்றியுள்ளது. இதன் விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 250 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரத்து 444 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை 128 ஜிபி மாடலுக்கானது ஆகும்.
இதன் 256 ஜிபி விலை 1 லட்சத்து 34 ஆயிரத்து 580 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரத்து 550 என்றும் 512 ஜிபி விலை 1 லட்சத்து 35 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 41 ஆயிரத்து 347 என்றும் 1 டிபி மாடல் விலை 1 லட்சத்து 35 ஆயிரத்து 420 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 11 லட்சத்து 77 ஆயிரத்து 092 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் பின்புறம் PCD கோட்டிங், ரோலெக்சில் பிளாக் டயல்கள், கேஸ் மற்றும் பிரேஸ்லெட்கள் உள்ளன. இந்த ஐபோனின் பின்புறம் ரோலெக்ஸ் காஸ்மோகிராப் டேடோனா வாட்ச் உள்ளது. இதில் 40mm எல்லோ கோல்டு வாட்ச் பேஸ் மற்றும் டைமண்ட் அக்செண்ட்கள் உள்ளன.