- குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது.
- ‘பிரி மெச்சூர்’ குழந்தைகளுக்கு ‘ரெட்டினல்’ பரிசோதனை மிகமிக அவசியம்.
டிஜிட்டல் யுகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள். கண் சம்பந்தமான விஷயத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வை குறைபாட்டை எப்படி கண்டறிவது, பெரியவர்கள் எதிர்கொள்ளும் கண் சார்பான பிரச்சினைகள், ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்கள் கண் பாதிப்புகளை எப்படி குறைப்பது?… போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார், யமுனா தேவி. கண் அறுவை சிகிச்சை நிபுணரான (போக்கோ ரெப்ராக்டிவ் சர்ஜன்) இவர் சென்னையில் மேற்படிப்பு முடித்து விட்டு, தற்போது கோவையில் பயிற்சி செய்து வருகிறார். இவர் கண்கள் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்.
* ஸ்மார்ட்போன், குழந்தைகளின் கண்களில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும்?
ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது. உணவு ஊட்ட, பொழுதுபோக்கு காரணங்களுக்காக பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் கூடுதலாக ‘அட்வாண்டேஜ்’ எடுத்து கொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கும். கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (ரெட்-ஐ) போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும்.
* குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகளை எப்படி கண்டறிவது?
இயல்பை விட எல்லாவற்றையும் மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி நின்று பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்கமுடியாமல், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் தவிப்பது, கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்துவதாக கூறி அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.
* குழந்தைகளுக்கு கண் பரிசோதனை எப்போது செய்யலாம்?
மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம், வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை அவசியமாகிறது. ஏனெனில் உடல் வளர்ச்சியை போலவே, வயதிற்கு ஏற்ற கண் வளர்ச்சியும் அவசியம். அதை கண்காணிக்கவும், குறைபட்டிருக்கும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கண் பரிசோதனை அவசியம். குறிப்பாக, 10 மாதத்திற்கு முன்பாகவே பிறக்கும் ‘பிரி மெச்சூர்’ குழந்தைகளுக்கு ‘ரெட்டினல்’ பரிசோதனை மிகமிக அவசியம். வெளிச்சத்தை உணர்கிறார்களா, அம்மாவை அடையாளம் காண்கிறார்களா… போன்றவற்றை ஆரம்பத்திலேயே சோதித்துவிட வேண்டும்.
* ஐ.டி. துறையில் வேலைபார்ப்பவர்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்?
ஐ.டி.யில் வேலைபார்ப்பவர்கள், ஒருநாளைக்கு குறைந்தது 8 மணிநேரமாவது கணினியை பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் கண் வறட்சி ஏற்படும். தலைவலி மற்றும் கண் வலி பிரச்சினைகளும் உண்டாகும். இப்படி அதிக நேரம் கணினியில் வேலைபார்ப்பவர்கள், அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். கண்களின் ஈரப்பதத்தை தக்க வைக்க நன்றாக தூங்கவேண்டும். கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும். கூடவே 20-20-20 முயற்சியிலும் ஈடுபடவேண்டும்.
20-20-20 என்பது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளையோ அல்லது வாசகங்களையோ 20 நொடிகளுக்கு பார்க்க வேண்டும். இதன்மூலம், கண்கள் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளலாம். இவையின்றி, கணினி பார்ப்பதில், அசவுகரியங்கள் இருப்பின், மருத்துவர் ஆலோசனைப்படி லூப்ரிகேஷன் மருந்துகளை பயன்படுத்தலாம்.
* பார்வை குறைபாடு பெற்றோர்கள் மூலமாக வருமா?
ஆம்..! ‘ரிஃபிரக்டிவ் எரர்’ எனப்படும் ‘ஒளி விலகல் பிழை’ மரபணு மூலமாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு வர 80 முதல் 90 சதவிகிதம், சாத்தியம் இருக்கிறது.
* இந்தியாவில் நிறையபேர் எத்தகைய பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
‘ஐ-பால்’ எனப்படும் கண் பந்தின் வளர்ச்சியை பொறுத்து, குறைபாடு மாறுபடும். கண் பந்து பெரிதாக இருந்தால் ‘மைனஸ்’ குறைபாடும், சிறியதாக இருந்தால் ‘பிளஸ்’ குறைபாடும் உருவாகும். அந்தவகையில், நம் இந்தியாவில் பெரும்பாலானோர், ‘மைனஸ்’ குறைபாட்டில் சிக்கி இருக்கிறார்கள்.
* குழந்தைகளின் பார்வை குறைபாட்டிற்கு, நிரந்தர தீர்வு இல்லையா?
மருத்துவ தொழில்நுட்பம் ரொம்பவே முன்னேறிவிட்டது. அதனால் நிரந்தர தீர்வு காண முடியும். 18 வயது வரை, பார்வை திறன் குறைபாட்டிற்கு கண்ணாடி அணிவது மட்டுமே தீர்வாகும். 18 வயதை எட்டியபிறகுதான், அவர்களது பார்வை திறன் ஒரு நிலையை அடையும். அந்த சமயத்தில், அவர்களது கருவிழி திரையின் தடிமனுக்கு ஏற்ப, அவர்களது பார்வை திறன் மதிப்பீட்டிற்கு ஏற்ப… லாசிக் சிகிச்சையோ அல்லது ஸ்மைல் சிகிச்சையோ செய்து, பார்வை குறைபாட்டை மீட்கலாம். ‘மைனஸ் 9.5’ இப்படி அதீத பாதிப்பு உள்ளவர்கள், ஐ.சி.எல். எனப்படும் நவீன சிகிச்சையின் மூலம் பார்வையை நிரந்தரமாக மேம்படுத்திக் கொள்ளலாம். கண்ணாடிக்கு குட்பை சொல்லலாம்.
* முதியவர்களுக்கு ஏற்படும் கண்புரை பாதிப்பை தவிர்க்க முடியாதா?
இதற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாகும். நம் கண்களில் உள்ள லென்ஸ் பாகம், மறைக்கப்படும்போது பார்வையின் தரம் குறைய தொடங்குகிறது. வயது மூப்பு காரணங்களால், தலை முடி நரைப்பது போல, தோல் சுருங்குவது போல, ‘காட்ராக்ட்’ எனப்படும் பார்வை திறன் குறைபாடும் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை குணப்படுத்த, நவீன அறுவை சிகிச்சைகள் உண்டு. முன்பை போல கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. எல்லாமே எளிமையாகிவிட்டது. அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பத்தில் வலி இல்லாமல், மைக்ரோ மினிமம் (1.5 மி.மி.) நுட்பத்திலேயே அகற்றிவிடலாம்.
* கண்களில் கட்டி வந்தால் என்ன செய்வது?
கெலோசியன் (chalazion) மற்றும் ஹார்டியோலம் (hordeolum) என்ற இரு வகையான கட்டிகள், கண்களில் வரும். இதில் ஹார்டியோலம் வலி மிகுந்தது. இமைகளின் ஓரத்தில் வரும். கெலோசியன், வலி இல்லாதது. இரண்டையும் கரைக்க மருத்துவரின் ஆலோசனை அவசியம். மருந்துகள் மூலமாக கரையாத கட்டிகளை, மருத்துவர் துணையோடு இன்டிவிஷன் டிரைனேஜ் முறையில் அகற்றலாம். கண் கட்டி விஷயத்தில், நீங்களாகவே சிகிச்சை எடுப்பது ஆபத்தானது. கூர்மையான பொருட்களை கொண்டு நீங்களே சுத்தப்படுத்த நினைத்தால், பார்வை இழப்புகளை சந்திக்க நேரலாம்.
* சர்க்கரை நோயாளிகள் கண் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டுமா?
சர்க்கரை அளவை சரிவர பராமரிக்காவிட்டால், ‘டயாபெடிக் ரெட்டினோபதி’ எனப்படும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும். டயாபெடிக் ரெட்டினோபதி என்பது, கண் விழித்திரையில் நடக்கும் ஒழுங்கற்ற மாற்றம். மருத்துவர்களால் மட்டுமே கண்டறியமுடியும், மற்றபடி ஆரம்பத்தில் இதை அறிகுறிகளால் கண்டறியமுடியாது. இவை, முடியைவிட மெல்லியதாக இருக்கும் கண் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கி, ரத்த கசிவு (retinal haemorhage) மற்றும் நீர் கசிவு (vitreous haemorhage) ஏற்படுத்தும். பார்வை திறனையும் குறைக்கும். இந்த பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதன் மூலம், லேசர் சிகிச்சை, இன்ட்ராவிட்ரியல் இன்ஜெக்ஷன், அறுவை சிகிச்சை ஆகியவை வழியாக பார்வையை காப்பாற்றலாம். பறிபோன பார்வையை திரும்ப பெறுவது சவாலானது. அன்றாட தேவைக்கேற்ற இன்டராக்குலர் லென்சுகளையும் பொருத்தலாம்.